பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



136

ஐங்குறுநூறு தெளிவுரை


கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றியவன்; அதற்கு உதவியது இவனுடைய வலிமிகுந்த யானைப்படை; சீற்றத்தோடு செல்லும் வேகத்திற்குச் சிறையழி புதுப்புனலை இங்கே உவமித்துள்ளனள். 'சிறை' - அணை ; நீரைத் தடுத்து நெறிப்படுத்தும் அமைப்பு; இதை உடைத்துச் செல்லும் வேகமிக்கது புதுப்புனல் என்பது கருத்து.

உள்ளுறை : மதிலழிக்கும் களிறுபோன்ற சினத்தோடு, குறுக்கிடும் சிறையழித்துச் செல்லும் புதுப்புனல் என்றது. சூளுரைத்துத் தன்னைக் கூடிய தலைவன். அதனையழித்துப் புதுக்காமத்தோடு தலைவியை நாடிச்சென்ற தன்மையை உள்ளுறுத்துக் கூறியதாகும். கட்டுமீறித் தன்போக்கிற் செல்லும் இயல்பினன் அவன் என்று பழித்துக் கூறியதாம். அதனை விலக்க நினைப்பவள், 'புதுப்புனலாடலை எம்மோடுங்கூடிக்கொள்க' என்கின்றனள்.

மேற்கோள்: 'காமக் கிழத்தி, நின் மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டிற்கு இயைந்தாள்போல மறுத்தது' என்று காட்டுவர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 50).

79. யார் மகள் ஆயினும் அறியாய்!

துறை : தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக்கேட்டு, தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றிய வழி, அவள் தோழி சொல்லியது.

[து, வி. தலைவன் தனியாகப் புனலாடினான்; அதுகண்டு ஊடிய பரத்தை. தானும் தனியாகவே ஒருபுறமாகப் புனலாடினாள். அதனைப் பார்த்தவன். அவள் ஊடலைத் தீர்த்தற் பொருட்டு, தான் ஏதும் அறியான்போல அவள் கைப்பற்றிப் புனலாடுதற்கு வருமாறு அழைக்கின்றான். அப்போது அவள் தோழி சொல்லியதாக அமைந்தது இது.]

'புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள் இவள்?' எனப் பற்றிய மகிழ்ந
யார் மகள் ஆயினும் அறியாய்:

நீ யார் மகனை, எம் பற்றி யோயே?