பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



138

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : மகிழ்நனே! யாம் நின்பாற் புலவிகொள்ளவே மாட்டேம். அதனால், பொய்யாக மறைக்காது உண்மையையே உரைப்பாயாக. அழகு நலத்திலே சிறந்தாரான மகளிர்க்கு, அவரைத் தாங்கும் தோள்தரும் துணையாக அமைந்து, முதற்பெயலாலே பெருகிவந்த புதுப்புனலிலே நீராடினதால், நின் கண்கள் இப்போதில் மிகமிகச் சிவந்துள்ளனவே!

கருத்து: 'நீதான் பரத்தையரோடு கூடிப் புதுப்புனலாடிக் களித்தனையாய் வருகின்றனை' என்றதாம்.

சொற்பொருள் : புலக்குவேம் - புலவி கொள்வேம். நலத்தகை - அழகு நலங்களின் சிறப்பு; இயல்பான எழிலும். புனைவாலே பெற்ற எழிலும் சிறப்பாக அமைந்த தகுதிப்பாடு; யாம் மகப் பயந்தேமாக, அஃதற்றேம் என்று, தன் குடிமைப் பெருமிதம் உள்ளுறுத்திக் கூறியதுமாம். தோள் துணையாகி - தோள்கள் தெப்பமாக அவரைத் தாங்கும் துணையாக விளங்க. தலைப்பெயல் - முதல் மழை. தவநனி - மிக மிக.

விளக்கம் : நீரிடத்தே நெடுநேரம் ஆடிக் களிப்பின் கண்கள் சிவப்படையும் என்பதை, அகம் 278, 812, குறுந்தொகை 854 செய்யுட்களுள்ளும் கூறப்படுவதாலும், அநுபவத்தாலும் அறியலாம். இயல்பாகவே நெடுநேரம் புதுப்புனலாடிக் கண்சிவக்க வீடுவந்திருந்த தலைவனிடம், தலைவி, இவ்வாறு படைத்துக்கூறிப் புலவிகொண்டனள் என்பதும் பொருந்தும். 'தலைப்பெயல்' என்பது 'கள்னி மழை' என்னும் காலத்தின் முதல் மழையைக் குறிக்கும். 'செழும்புனல்' என்பதற்குச் 'செம்புனல்' என்றும் பாடபேதம் கொள்வர்; அது சிவந்த புனல் என்றும், பெரும்புனல் என்றும் பொருள் தரும். இனிக்கூடலிலே பரத்தையோடு இன்புற்று, அப்புணர்குறிகளோடு வீடுவந்தானிடம் ஊடிய தலைவி, அவன் புனலாடிக் கண்சிவந்தேன் எனப் பொய்ம்மைகூற, அவள் தானறிந்தமை கூறிப் பொய்த்தல் வேண்டாவெனக் கூறியதாகவும் கொள்ளலாம், அவனை வெறுத்தற்கு இயலாமனத்தள் தலைவியாதலின். இப் புதுப்புனலாடல், பழைய நாளிலே ஒரு விழாவாகவே கொள்ளப் பெற்றது. கணவனும் மனைவியும் கைகோர்த்தே புனலாடல் இன்றும் மரபாகத் தென்னாட்டில் விளங்கி வருகின்றது. ஆகவே, மனைவியோடு சேர்த்து புனலாடற்குரியவன், பரத்தையரோடு கூடிக் களித்தாடின். அது பழியாகக்

கொள்ளப்பட்டது என்க.