பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பேணுகின்ற ஆட்சிச்சால்பினன் என்பதனால், இவனை 'யானைக் கண்சேய்' என்று கூறிச் சான்றோர் சிறப்பித்தனர் ஆகலாம். . ’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்னும் செயல்கொள்ளும் பாங்கிலேயும் சிறந்த ஆற்றலினான இவன், இத்தொகை நூலைத் தொகுக்கும் பெரும்பணியினைப் 'புலத்துறை முற்றியவர்' என்னும் பெரும் புகழ்மையினைக் கொண்டரான கூடலூர் கிழாரிடம் ஒப்பித்தனன். இவர், மலைநாட்டுக் கூடலூரினர் என்று சொல்லப்படுகின்றனர். இதனைக் கம்பத்தையடுத்த மதுரை மாவட்டக் கூடலூராகவே கொள்ளல் மிகவும் பொருந்தும்.

வானத்தே ஒரு விண்மீனின் வீழ்ச்சியைக் கண்ட இவர், அது வீழ்ந்த காலநிலையை ஆராய்ந்து, வீழ்ந்தது மாந்தரனின் மறைவை முன்னதாக உணரக் காட்டுவதெனவும், அம் மறைவு இன்ன நாளிலே நிகழும் எனவும் தெளிவாகக் கணித்து வைத்திருந்தவர். அவ்வாறே அவனும் அந்நாளிலேயே மறைந்தானாக, பெரிதும் ஆற்றாமையால் இவர் பாடியதே புறநாநூற்றின் 229ஆம் செய்யுள் ஆகும். இதனால், இவர் காலக்கணிதத் திறனும், நுட்பமாகக் காலமுணர்த்தும் வருங்காலப்பலனறியும் திறனும், தம் தமிழ்ப்புலமையோடு சேரப்பெற்றிருந்தனர் என்றும் நாம் அறியலாம். இத் தொகையைச் செய்ததன்றியும், குறுந்தொகையுள் 3 செய்யுட்களையும் இவர் செய்திருக்கின்றனர் என்றும் காண்கின்றோம்.

இத் தொகைநூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனாரே யாவர். அதன் சிறப்பினை எல்லாம் நூலினுள்ளே காணலாம். இதன்,

முதல் நூறான மருதம் ஓரம்போகியாராலும்,
இரண்டாம் நூறான நெய்தல் அம்மூவனாராலும்,
மூன்றாம் நூறான குறிஞ்சி கபிலராலும்,
நான்காம் நூறான பாலை ஓதலாந்தையாராலும்,

ஐந்தாம் நூறான முல்லை பேயனாராலும்

பாடப் பெற்றுள்ளன. இதனைக் குறிக்கும் பழைய வெண்பா,