பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



140

ஐங்குறுநூறு தெளிவுரை


விரும்பினேன் என்றும் கூறுகின்றனை. இதனை நின் மனையோள் கேட்டனளாயின், மனம் பொறாதாளாய் மிகவும் வருந்துவள் காண்!

கருத்து: ஆகவே, 'நீயும் என்னை மறத்தலே நன்று' என்றதாம்.

சொற்பொருள் : குருகு - நீர்ப்பறவை. அகடு - வயிறு. அரிப்பறை - அரித்தெழுகின்ற ஓசையுடைய உழவர் முழக்கும் பறை; அறுவடைக்கு முன்னர், வயலை வாழிடமாகக் கொண்ட புள்ளும் பிறவும் அவ்விடம் விட்டு அகன்று போதற்பொருட்டு, உழவர் பறை முழக்குதல் என்பது அருள்மிகுந்த தமிழ் மரபாகும். வினைஞர் - தொழிலர்: உழவர். அல்குமிசை - மிக்க உணவு; இட்டுவைத்து உண்ணும் கட்டுணவும் ஆம். வாயில் - நீர்த்துறை, மனையோள் - மனையாட்டி.

விளக்கம்: குருகினம் உண்டுகழித்த யாமையின் இறைச்சியை உழவர் தம் கட்டுச்சோற்றோடும் கூட்டியுண்பர் என்றது அவ்வயல்கள் வயலாமைகள் மிக்குவாழும் நீர்வளம் மலிந்தனவென்பதாம். அரிப்பறை ஒலிகேட்டு அவை அகல, உழவர் குருகினம் விட்டுச்சென்ற மிச்சிலைத் தம் உணவோடு கூட்டி உண்பர் என்க. 'மலரணி வாயில் பொய்கை' என்றது, மலரால் அழகுபெற்று விளங்கும் பொய்கை' என்றதாம். 'என்னை நீ விரும்பினேன் என்று கூறியதைக் கேட்டால், நின் மனைவி பெரிதும் மனம் வருந்துவாள்' என்றது, 'அவளினும் நீயே எனக்கு மிகவும் விருப்பினள்' என்று கூறுவான் என்பதறிந்து கூறியதாம். அதனைக் கேட்கும் தலைவியின் பாங்கியர் தலைவியிடம் கூற, அவள், தலைவனைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாமைக்கு நெஞ்சழிந்து மேலும் நலிவாள் என்பதாம்.

உள்ளுறை : குருகுகள் உண்டுகழித்த யாமையின் இறைச்சியை, உழவர்கள் தம் சோற்றோடு சேர்த்து உண்பது போல, யாம் நுகர்ந்துகழித்த தலைவனைத் தலைவியும் விரும்பி நுகர்வாள் என்று, உள்ளுறைப்பொருள் தோன்றக் கூறியதாம்.

பாடபேதம்: 'வினைஞர் நல்குமிசை' எனவும் பாடம். நல்குமிசை என்பது. பலர்க்கும் நல்கித் தாமும் உண்ணும் கட்டுணவு. இதற்கு, நின் மார்பினைத் தான் துய்த்தலன்றி, யாமும் துய்த்தற்கு உரிமையுடையோம் என்பதைத் தலைவி அறியாது போயினள் என்றதாம்.