பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

ஐங்குறுநூறு தெளிவுரை


தலைமகன் மார்பின் மாலையினை 'அவிழ் இணர் நறுந்தார்' எனவும், தன் கூந்தல் மலர்களைப் 'போது' எனவும் குறிப்பிட்ட சிறப்பும் காணவேண்டும். தேனுண்ணற்கான அவன் மார்பின் மாலைமலர்களைவிட்டு எழுந்து போதாக மலரும் செவ்விநோக்கி இருக்கும் தன் கூந்தல் மலர்களில் மொய்த்தது பற்றிக் கூறியது. அதுதான் தான் விரும்பும் இனியநுகர்வை அடையாது போகும் பேதைமைபற்றிக் கூறியதாம். இது மணம்பெற்று என்னோடும் கூடியின்புற்றிருந்த தலைவன், தன் பேதைமையாலே, இன்பநுகர்வுக்குரிய பக்குவமும் பெறாத இளையாளான பரத்தையை நச்சித் திவானாயினனே என்று தலைவனின் அறியாமை சுட்டிக் கூறியதுமாகும்.

83. பையப் பிரிந்து வாழ்க!

துறை : வரைந்த அணிமைக்கண்ணே, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி, அதனை அறிந்த தலைவி, அவனோடு புலந்து சொல்லியது.

[து. வி.: தலைவியை மணந்து மனையறம் தொடங்கி நெடுங்காலங்கூடக் கழியவில்லை. அதற்குள்ளேயே அவளை விட்டுப் பரத்தையுறவை நாடிச் செல்வானானான் தலைவன். அதனைப் பலரும் சொல்லக் கேட்ட தலைவி, அவன் தன்னை அணுகும்போது புலந்துகூறுவதாக அமைந்த செய்யுள் இது. ]

மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை யாகி, உய்ம்மோ - நும்மூர்
ஓண்தொடி முன்கை ஆயமும்

தண்துறை ஊரன் பெண்டெனப் படற்கே.

தெளிவுரை : எம்மை விரும்பி மணந்து கொண்டோனாகியந்தான், எமக்கு அருள்செய்தலைக் கைவிடுவாய் ஆயினும், நின் ஊரிடத்தேயுள்ள ஒள்ளிய தொடிவிளங்கும் முன்கையினரான பரத்தையர் மகளிர் பலரும், 'தண்ணிய துறைகொண்ட ஊருக்குரிய நிள் பெண்டு' எனச்சொல்லப்படுவதற்கு உரியளாகுமாறு மெல்லமெல்ல எம்மை நீங்கினையாகிச் சென்று ஒழுகுவாயாக!

கருத்து: 'இதனையாவது அருளிப் பேணுவாயாக' என்றதாம்.