பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

145


[து. வி.: தலைமகன் பரத்தையரை நாடிச் செல்வதற்குப் புறப்பட்டவன், சிறிது காலம் தாழ்த்துப் போகவேண்டியதாகவே, தன் மனையினுள்ளே சென்று புகுந்தான். அவன் ஒப்பனையும் பிறவுமறிந்த தலைவி,வருந்திக் கூறி, அவனைப்போக்கு விலக்கியதாக அமைந்த செய்யுள் இது.]

வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை
தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
மறுவில் யாணர் மலிகேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;

நகாரோ பெரும! நிற்கண்டிசி னோரே?

தெளிவுரை : வெண்மையான தலையையுடைய சம்பங்கோழியின், அரித்த குரலையுடைய பேடையானது, தன் சேவல் பிரிந்ததென்று, குளிர்ந்த நறுவிய பழனங்களிலுள்ள, தன் கிளைகளோடு சொல்லிச் சொல்லிக் கூவியபடியிருக்கும், குற்றமற்ற, மிகுதியான புதுவருவாயினையுடைய ஊரனே! நீதான் சிறுவரைப்போலே பின்விளைவு கருதாயாய் இத்தகைய செயலைச் செய்கின்றாயே! நின்னைக் கண்டோர், நின் செயலைப்பற்றி எள்ளி நகையாட மாட்டார்களோ?

கருத்து: 'குடிப்பழி மிகுதலை நினைத்தாயினும், நின் பொருந்தாப் போக்கைக் கைவிடுக' என்றதாம்.

சொற்பொருள்: 'நுதல்' என்றது தலையின் மேற்பகுதியை; சம்பங்கோழியின் தலையின் மேற்பக்கம் வெள்ளையாயிருக்கும் என்பது இது. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - அரித்தரித்தெழும் குரல். கிளை - தன்னினப் பிற கோழிகள். ஆலும் - கூவும். மறுவில் - குற்றமற்ற; மறிவில் எனவும் பாடம்; தடையற்ற என்பது பொருள். 'நறும் பழனம்' என்றது, அதிலுள்ள பூக்களால். செய்தி - செய்வாய்.

விளக்கம் : 'சேவலைப் பிரிந்த கோழி, தன் துயரைச் சொல்லித் தன் இனத்தோடு கூவியபடியிருக்கும் பழனம்' என்றது, தானும் அவ்வாறு புலம்பவேண்டியிருந்தும், குடிநலன் கருதித் தன் துயரை அடக்கியிருக்கும் தன் பெருந்தகைமை தோன்றக் கூறியதாம். சிறுவர், செய்வதன் பின் விளைவு அறியாதே செய்து, பின் பலராலும் நகையாடப் படுவர் என்பாள், 'சிறுவரின் இனைய செய்தி' என்றனள்; 'நீதான் பொறுப்புடைய குடித்தலைவன் ஆயிற்றே, அதனை மறந்

ஐங். - 10