பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



148

ஐங்குறுநூறு தெளிவுரை


பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர ! நின் மனையோள்

யாரையும் புலக்கும்; எம்மை மற் றெவனோ?

தெளிவுரை : பகன்றைப் பூக்களைத் தொடுத்துத் தலைக் கண்ணியாகச் சூடியவரும், பலவான ஆனிரைகளை உடையவருமான கோவலர்கள், கரும்பைக் கையின் குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனிகளை உதிர்க்கின்ற, புதுவருவாயினை உடைய ஊரனே! நின் மனையாள் யாவரையும் புலந்து பேசுபவளாதலின், அவ்வாறே எம்மையும் புலந்து கூறினாள் என்பது என்ன முதன்மைத்தோ?

கருத்து: 'நின் தலைவி பழித்துப் பேசுவது எதற்கோ?' என்றதாம்.

சொற்பொருள்: பகன்றை - வெண்ணிறப் பூப்பூக்கும் ஒருவகைச்செடி; பூக்கள் பெரிதாகக் கிண்ணம்போல் பனிநீர் நிறைந்து காலையில் தோன்றும் என்பர்; சிவதைச்செடி என்றும் கூறுவர். கண்ணி தலைக்கண்ணி. கோவலர் - பசுமந்தை உடையோர். குணில் - குறுந்தடி.

விளக்கம்: 'மனையோள்' என்றது. மனைக்குரியோளான தலைவியை. "யாரையும்" என்றது,தலைவனோடு உறவுடைய பிற பெண்டிரையும் என்றதாம். அன்றி, அவன் எவரொடும் மகிழ்ந்து உரையாடினாலே அதுபற்றிப் புலந்து கூறும் இயல்பினள் என்பதும், 'யாரையும் புலக்கும்' என்றதாற் கொள்ளப்படும்.

உள்ளுறை: கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்து இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றனள். இவ்வாறே, தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின், அவரையே இகழ்ந்து கூறித் தலைவியைத் தெளிவித்து, அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றனள்.

'கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் ஊர" என்றது. யாங்கள் பழித்தேமென்று அவட்கு இனியசொல் கூறி, அவள் எங்களைப் பழித்துக் கூறும் சொற்களை. நினக்கு இனியதாகப் பெறுவாய்' என்றவாறு என்பது பழையவுரை.