பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;
கருதும் குறிஞ்சி கபிலன்;--கருதிய
பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;

நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும். இவற்றுள் மருதமும் நெய்தலும், ஐங்குறுநூறு தெளிவுரையின் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.

கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செய்யுட்களைச் செய்வதிலே புகழ்படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செய்யுட்களைச் செழுமையோடு ஆக்கித்தர, அவற்றை ஆராய்ந்து, அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டனர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.

'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி, மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை என முறைப்படுத்தித்தொகுத்து இந்நூலை இவர் தமிழலகுக்குத் தந்திருக்கின்றனர். வேளாண் குலத்தவராதலால் மருதத்தை முதலிலும், மாந்தரன் நெய்தல் நிலத்துத் தொண்டியிலிருந்தோனாதலின் அதனை அதற்கடுத்தும், நடுநாயகமாகும் சிறப்பினது என்பதால் குறிஞ்சியை நடுவாக வைத்தும், முல்லையின் எழிலைக் கருதி அதனை இறுதியில் வைத்தும், குறிஞ்சியும் முல்லையும் திரிந்தே பாலையென்னும் நிலையை எய்தலால் பாலையைக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையில் வைத்தும் இவர் தொகுத்தனர் என்று கருதலாம். இது நம் ஊகமாக அமையலாமேயன்றி, முறையான காரணம் எனல் பொருந்தாது. ஆனால், விதியை மீறுவோர் அதற்கான காரணமுமுணர்ந்த புலமைச் சால்பினர் என்னும்போது, அதன் காரணம் ஆராய்தற்கு உரியது என்றே நாம் கொள்ளல் வேண்டும். ஆய்வாளர்கள் இம் முயற்சியிலே சிறிது மனஞ் செலுத்துவாராக.