பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

155


தெளிவுரை : நெறித்த கொம்பையுடைய எருமையின் கருமையான பெரிய கடாவானது' மணமுள்ள மலர்கள் அதனிடத்தேயுள்ள நிறைந்த பொய்கையிலே சென்று, ஆம்பலைச் சிதைக்கும். அத் தன்மையதும், கழனிகளை உடையது மான் ஊரனுக்கு இவள்தான் மகளாவாள். இவள், பழனங்களிலுள்ள கரும்பிடத்தே பூத்த மணமற்ற பூவால் தொடுத்து விளங்கும் மாலையினையும் உடையவள் காண்பாயாக!

கருத்து: 'அத்தகு மடமை கொண்டவளை விரும்பிச் சுற்றாதே போய்வருவாயாக' என்றதாம்.

சொற்பொருள்: நெறிமருப்பு - நெறித்தலுடைய கொம்பு: நெறித்தல் - வளைதல்; முறுக்குடன் தோன்றல். 'நீலம்', கருமை குறித்தது. போத்து - எருமையின் ஆண் ; எருமைக்கடா. வெறி - மணம். மயக்கும் - சிதைத்து அழிக்கும். கழனி விளைவயல்கள். வெதிர் - கரும்பு: 'பழன வெதிர்' எனவே, தானே கிளைத்து வளர்ந்துள்ள கரும்பு என்க; இது உண்ணற்காகா வேழக்கரும்பும் பேய்க்கரும்பும் போல்வன. கொடிப் பிணையல் - பிணைத்துக் கொடிபோலக் கட்டிய மாலை.

விளக்கம் : வெறிமலர் அருமையும் ஆம்பலின் மென்மையும் அறியமாட்டாத எருமைப்போத்தானது, பொய்கையுட் புகுந்து தான் நீராடிக் களிக்கும் வகையால், அவற்றைச் சிதைக்கும் ஊரன் மகள் என்றனள், இதனால், அவள் தந்தை தன் செயலிலே ஈடுபடுங்கால், பிறருக்கு நேரும் அழிவைப்பற்றி எல்லாம் நினைத்து ஒதுங்கும் தன்மையற்ற மடமையோன் என்றதாம்; இதனால், இவள் தந்தையும் ஐயன்மாரும் நின் செயலறியின் நினக்கு ஊறுசெய்வதிலே தப்பார் என்றும் சொல்லி எச்சரிக்கின்றனள்.

சிறப்பற்ற பழனவெதிரின் பூவைக்கொய்து, மாலைதொடுத் திருக்கும் தன்மையள் எனவே, அதுதான் சூடற்காகா என்பதும் அறியா நனிபேதையள் அவள்; அவளை நீ விரும்புதல் யாதும் பயனின்று என்பதாம்.

மேற்கோள்: திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது; இஃது இளையள் விளைவிலள் என்றது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத். 12.)