பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

157


அறத்தொடு நின்றேனும், அவளைத் தான் பெற்ற்காவன செயல் வேண்டும் என்றதும் இதுவாகலாம்.

உள்ளுறை : 'தலைவியின் தாய் தன் மகள்மீதுள்ள பேரன்பால், தமர் மறுத்தவிடத்தும், அறத்தொடு நின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்' என்னும் உறுதியைப் புலப்படுத்தவே, அவ்வூர்க் கன்றீன்ற எருமையும், தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் னலாம். 'பெறினே வருதும்' என்றது. "பெறுவதானால் வரைவொடு வருவோம்' எனவுரைத்து, தோழியது ஒத்துழைப்பையும் விரும்பியதாம்.

மேற்கோள்: 'கிழவோன் சொல்லும் உள்ளுறையுவமம் தன்னுடைமை தோன்றச் சொல்லப்படும்; 'கருங்கோட்டு... பெறினே' என்றவழி. தாய்போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமைதோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க' எனக் காட்டுவர் பேராசிரியர் - (தொல். உவம. 27).

திணைமயக்குறுதலுள் இது மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என நச்சினார்க்கினியரும் - (தொல். அகத். 12): திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்குரிய புணர்தல் மருதத்திணையோடு மயங்கி வந்தது என இலக்கணவிளக்க உரைகாரரும் - (இ. வி. 894); இச் செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவர்.

93. தாதுண்ணலை வெறுத்த வண்டு!

துறை: முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால், பண்டையளவு ஆன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?" என்று வினாவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[து. வி.: களவிற் கலந்து இன்புற்ற தலைவியின் மேனியிலே எழுந்த நறுமணத்தால் வண்டினம் மிகுதியாக வந்து மொய்க்கின்றன. அதுகண்டு ஐயுற்று வினாவிய செவிலித்தாய்க்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. சிறைபபுறத்தானாகிச் செவ்வி பார்த்திருக்கும் தலைவனும் கேட்டு, இனித் தலைவி இச்செறிக்கப்படுதலும் நேரும்; ஆகவே விரைந்து வரைந்துகொள்ளலே செயத்தக்கது என்று துணிவான் என்பதாம்.]