பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஐங்குறுநூறு தெளிவுரை


எருமைநல் லேற்றினம் மேயல் அருந்தென
பசுமோ ரோடமோ டாம்பல் ஒல்லா
செய்த வினைய மன்ற பல்பொழில்
தாதுண் வெறுக்கைய வாகி, இவள்

போதவிழ் முச்சி யூதும் வண்டே.

தெளிவுரை : பலவான பொழில்களிலும் உள்ளனவாகிய மலர்களிலே சென்று தேனுண்ணல் வெறுத்தனவாகிய வண்டினம் இவளது இதழ்விரி புதுமலர் விளங்கும் கூந்தலிலே வந்து மொய்த்தன. அதுதான் எருமையின் நல்ல ஏற்றினம் மேய்ந்துவிட்டதாலே பசிய செங்கருங்காலியும் ஆம்பலும் பொருந்தவாயினமை கண்டு, செய்தவோர் ஓர் வினையும் ஆகும்.

கருத்து: 'வண்டினம், புதுமைதேடி இவள் பூவிரிகூந்தலில் மொய்த்தனவன்றிப், பிற காரணம் ஏதுமன்று' என்றதாம்.

சொற்பொருள்: மேயல் அருந்தென - மேய்ந்து அருந்தி விட்டதாக. பசுமோரோடம் - பசிய செங்கருங்காலி; இதன் பூ மிக்க நறுமணமுடையது: நறுமோரோடம் என்று நற்றிணை கூறும் (337). சிறுமாரோடம் என்பது குறிஞ்சிப் பாட்டு (78). மகளிர் கூந்தலின் இயல்பான நறுமணத்திற்கு மோரோடப் பூவின்மணத்தையும் ஆம்பலின் மணத்தையும் உவமிப்பது மரபு. செய்த வினைய - செய்ததான செயலாகும். வெறுக்கைய - வெறுத்தனவாக; செறிவுடையனவாகியும் ஆம். போதவிழ் முச்சி - இதழ்விரிந்த மலரணிந்த கூந்தல்.

விளக்கம் : புணர்ச்சியிலே திளைத்த மகளிர் மேனியிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் போன்றவொரு நறிய மணம் எழும் என்பதும், அஃதுணர்ந்த செவிலி ஐயுற்று வினவினள் என்பதும், அவள் ஐயத்தைத் தெளிவிக்கத் தோழி இவ்விதம் புனைந்து கூறியதாகவும் கொள்க. மகளிர் கூந்தலின் மணத்தாற் கவரப்பெற்று, பூநாடிப் போகும் வண்டினம் மொய்க்கும் என்றது, பலரானும் காட்டப்பெறும் நிகழ்வாகும். இதனால். செவிலி ஐயுற்றனள் என்பதும், இனித் தலைவிக்குக் காவல் மிகவே, களவு கைகூடல் அரிதென்பதும், தலைவனுக்கு உணர வைத்தனள். மோரோடம் நிலத்தின் மரம்; ஆம்பல் நீர்க்கன் உள்ளது: இரண்டையும் எருமையேறு தின்று அழிக்கவே, அவை நாடிப் போகாமல், தலைவியின் போதவிழ் முச்சியை நாடின என்கின்றனள்; வண்டினத்து அறியாமையன்றிப் பிறிதல்ல அது என்பதாம். ஊரலர் எழும் என்றதும் ஆம்