பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஐங்குறுநூறு தெளிவுரை


பதனை நினைவிற் கொண்டு கூறியதாகும். 'நிழல் முதிர் இலஞ்சி' என்றது, மரங்கள் அடர்ந்து நிழல் செய்தபடி விளங்கும் நீர்நிலை என்றற்காம். தான் முன்னர்த் தலைவியைக் களவிற்கூடியின்புற்ற இடம் அதுவெனலால், அதனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க. 'கழனித்தாமரை மலரும்' என்றது, தான் அவளை வரைந்து மணங்கொள்ள ஊரவர் அனைவரும் களிப்படைந்தாராய் மகிழ்வர் என்பதாம். 'கழனித்தாமரை மலரும் கவினைப்பெற்றுச் சுடர்கின்ற நுதல்' என்று தலைவியின் நுதலழகை வியந்ததாகக் கொள்ளலும் பொருந்தும். இதனால், அவன் வரைவொடு வருவானாதலும் உணரப்படும். 'மள்ளர்' என்னும் சொல்லே 'மல்லர்’ என்றாகிப், பொதுவாக மற்போரிடும் தன்மையரைக் குறிப்பதாயிற்று.

95. பகலும் நோய் செய்தனள்!

துறை: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப், பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது.

[து. வி.: பரத்தையின் உறவுடையோன், தன் உணவுக்கு மட்டும் மனைநாடி வந்து போயினதால், அவனைக் காணலும் பேணலுமாகிய அவற்றாலேனும் சிறிதளவுக்கு மன அமைதி பெற்று வந்தாள் தலைவி. அதனையும் கைவிட்டு, அவன் பரத்தையின் வீடே தங்குமிடமாகவும் அமைத்துக்கொள்ள அந்தச் சிறிய மனவமைதியையும் இழந்தாள் அவள். அக் காலத்து ஒருநாள், தலைவன் வருகை தெரிவித்து வந்தாரான ஏவலர்களுக்கு, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

கருங்கோட் டெருமை கயிறுபரிந் தசைஇ,
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனன்முற் றூரன் பகலும்

படர்மலி யருநோய் செய்தனன் எமக்கே.

தெளிவுரை : கரிய கொம்புகளையுடைய எருமையானது, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று, நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரினைத் தன் நாளுணவாக மேய்ந்திருக்கும், நீர்வளம் சூழ்ந்துள்ள ஊரன் தலைவன். அவன்தான், எமக்குப் பகற்போதிலும் படர்ந்து பெருகும் தீராத பெருநோயினைச் செய்தனனே!

கருத்து: 'அவன் எம்மை முற்றவும் மறந்தனன்' என்றதாம்.