பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

161


சொற்பொருள்: பரிந்தசைஇ - அறுத்துச் சென்று. நாள் மேயல் - அற்றை நாளுக்கு உண்ணற்கான உணவு. புனல் - நீர். முற்றுதல் - சூழ்ந்திருத்தல்; நிரம்பியவும் ஆம். படர் மலி நோய் - படர்ந்து பெருகும் நோய்; காமநோய். 'அருநோய்' என்றது, செய்தானையன்றிப் பிறவற்றால் தீராத அரிய தன்மையுடைய நோய் என்றதால்.

விளக்கம்: 'பகலும்' என்பதிலுள்ள உம்மை இரவின்கண்ணும், அவனைப் பிரிந்துறையும் துயரினால் நோயுற்றுக் கண்ணும் படாதே நலிபவள், பகற்போதிலும் அவன் செயலின் கொடுமை பற்றிய நினைவாலும், அறிந்துவந்து பழிப்பாரின் பேச்சாலும், மனையறத்தின்கண் அவனில்லாதே விளையும் குறைகளாலும், மேலும் மனம் புண்பட்டு வருந்துவள் என்பதாம்.

ஆகவே, 'பொறுத்துப் பொறுத்துப் பழகிய இத் துயரோடேயே யான் அமைவேன்; மீளவும் என்பால் மறைந்த உணர்வுகளை எழுப்பிவிட்டு என்னை வருத்தல் வேண்டா' என்று வாயில் மறுத்ததாகக் கொள்க.

உள்ளுறை: 'எருமை தன்னைக் கட்டிய கயிற்றை அறுத்துப்போய், நெற்பயிரைச் சென்று மேயும் ஊரன்' என்றது, அவ்வாறே தலைவனும் தன் குடிப்பெருமையும், காதன் மனைவிக்குச் செய்யும் கடமையுமாகிய கட்டுப்பாடுகளை விட்டு நீங்கிச் சென்று, பரத்தையோடு உறவாடிக் களிப்பானாயினான் என்றதாம்.

உழவரின் சினத்துக்கும் ஒறுப்புக்கும் சிறிதும் அஞ்சாதே தன் நாச்சுவையே கருதிச்செல்லும் எருமைபோல, ஊராரின் பழிக்கும் உறவினரின் வெறுப்புக்கும் கவலையற்றுத் தன்னின்பமே நச்சித்திரியும் மடவோனாயினன் தலைவன் என்பதும், அவனைத் தகைப்பாரிலரே என்பதும் ஆம்.

இனி, எருமை, கட்டிய கயிறறுத்துப்போய் விளைவயலை மேய்ந்து களித்தாற்போலப், பரத்தையும், தன் தாயின் கட்டுக்காவலை மீறிச்சென்று தலைவனோடு உறவாடி இன்புறுவதன் மூலம், விளைவயல்போலப் பெரும்பயன் தருதற்குரிய தலைவியின் மனையற வாழ்க்கையைச் சிதைப்பாளாயினள் என்றலும் பொருந்தும்.

96. கழனியூரன் மகள்!

துறை: பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு, பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள், தம்முள்ளே சொல்லியது.

ஐங். - 11