பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

163


இன்துணையாகி இன்புறுத்தும் செவ்வியளாயினள் என்பதாம். இக்கற்புச்சால்பு அவள் பிறந்து வளர்ந்த குடிமரபிலே வந்து படிந்து வலுப்பெற்ற பெருந்தகைமை என்றும் வியந்தனராம்!

உள்ளுறை: தலைவன் ஊர்ப்பொது நிலம்போலப் பரத்தையர் பலருக்கும் இன்பளிக்கும் தன்மையனாயினும், அவள் உரிமையுடைய கழனியைக் காத்துப் பயன்கொள்ளும் ஊரனின் மகளாதலின், அவன் தனக்கேயுரியவன் என்னும் மணம்பெற்ற உரிமையால், அவனை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சி தந்து உதவும் செவ்வியளாயினள் என்றதாம்.

மேற்கோள்: வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது என்று இச் செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 11).

97. பொய்கைப் பூவினும் தண்ணியள்!

துறை: புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும் உளதென்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண் தன்னுள்ளே சொல்லியது.

[து. வி.: பரத்தைமை அற்றவனான தலைமகன், தலைவி தன்னை அஃது உடையான் என நினைத்து ஊடியிருந்தபோதில் அவ்வூடலைத் தன் தெளிவுரைகளாலும் பிறபிற அன்புச்செயல்களாலும் தீக்கித் தெளிவித்து, அவளோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவன், அக் கூடலின் இறுதிக்கண், தலைவியின் தன்மையைத் தன்னுள்ளே நினைந்து வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

<.poem>

பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை யூரன் மகள் இவள்

பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.

</poem>

தெளிவுரை : பகன்றையது வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த தன் தாயது கொம்பைக் கண்டு, கருங்கால்களையுடைய அதன் கன்றானது அஞ்சும் தன்மையுடைய, பொய்கை விளங்கும் ஊரனின் மகள், இவள்! இவள்தான். அப் பொய்கையிடத்தே பூக்கின்ற ஆம்பற் பூவினும் மிகவும் குளிர்ச்சியான அன்புள்ளவள் ஆவாளே!