பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

165


திளைக்கும் வரையும் அழகும் தண்மையும் உடையளாகி, அதிற் குறையுறின் வாடி நலனழியும் மென்மையள் என்று போற்று வான், 'பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியள்' எனப் புகழ்ந்தான் என்பதும் ஆம்.

98. இவளின் கடியரோ?

துறை : புறத்தொழுக்கம் உளதாகிய துணையானே புலந்து, வாயில் நேராத தலைமகள் கொடுமை, தலைமகன் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது.

[து. வி. : தலைவன் புறத்தொழுக்கம் உடையவனாகவே, தலைவி புலந்து ஊடியிருந்தாள். தலைவன் அஃதறிந்து, அவள் ஊடலைத் தீர்த்துத் தலையளி செய்ய, வாயில்கள் மூலம் முயன்றான். தலைவியோ இசைய மறுத்துக் கடுஞ்சொற் கூறி அவரைப் போக்கிவிடுகின்றாள். இதனைப்பற்றித் தலைவன், தலைவியின் தோழியிடம் கூற, அவள் அவனுக்குப் பதிலுரைப்ப தாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

தண்புன லாடும் தடங்கோட் டெருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண்தொடி மடமகள் இவளினும்

நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே!

தெளிவுரை : தண்ணிய புனலின் கண்ணே நீராடியபடியிருக்கும், பெரிய கொம்பினையுடைய எருமையானது, திண்ணிதாகப் பிணிக்கப்படுதலையுடைய அம்பிபோலத் தோன்றும் ஊரனே! நின்பாற் குறை காணும்போதிலே, அது குறித்து நின்னைக் கடிவதிலே, நின் தந்தையும் தாயும், ஒள்ளிய தொடியணிந்த மடமகளான இவளினும் காட்டில் கடுமையானவர்களோ?

கருத்து: 'நின்னைக் கடிந்து கூறித் திருத்தும் உரிமையுடையவள் நின் தலைவி' என்றதாம்.

சொற்பொருள்: அம்பி - படகு. திண்பிணி - திண்மையாகச் சேர்த்துக் கட்டப் பெற்ற; அம்பியின் அமைப்புக் குறித்தது இது! பல மரங்களைச் சேர்த்துத் திண்மையாகக் கட்டியிருப்பது. மடமகள் - மடப்பம் பொருந்திய தலைவி.