பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஐங்குறுநூறு தெளிவுரை


கைவிட்டதும் பற்றியெல்லாம், என்னைச் சினந்து வெறுத்தொதுக்காது, பூக்கஞல் ஊரனின் மகள் ஆதலின், தான் தன் நறும்பண்பிலேயே மேம்பட்டு நின்றாளாய். என் நோய்க்கும் மருந்தாகி, என்னையும் வாழ்வித்தனள் என்றனன்.

உள்ளுறை : இனித் தோழியரும் உறவோரும் என் கொடுமையினை எடுத்துரைத்து, அவள்பாலுள்ள அன்பின் மிகுதியாலே. அவளுக்குக் கொடுமைசெய்த என்னை ஏற்காத படி விலக்கவும், அவள் என்னை வெறுத்துப் போக்காளாகித், தன் கற்பின் பெருமிதத்தால் என் நோய்க்கு மருந்தாகி, எனக்கிசைந்து, யான் இன்பம் எய்துதற்குத் தன்னைத் தந்து உதவியும் சிறந்தனள் என்று உள்ளுறையால் கூறினதும் ஆம்.

இவ்வாறு கொள்ளின் முயிறுமூசு குடம்பையைநெற்கதிரோடு எருமை மயக்கும் என்றதனை, யான் செய்த கொடுமையையும், அவர்கள் என்மேல் சினமுற்றுக் கூறியவற்றையும் சிதைத்து, என்பக்கலேயே அவள் நின்றாள் என்று, வியந்து போற்றி உரைத்ததாகக் கொள்க.

100. நரம்பினும் இன் கிளவியள்!

துறை : வாயில் நேர்தற் பொருட்டு, முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழித், தலைமகள் இயற்பட மொழிந்த திறம், தலைமகற்குத் தோழி சொல்லியது.

[து. வி.: பரத்தைமை பூண்டிருந்த தலைவன், தன் மனைவியின் நினைவெழத், தான் மனைக்கு வருவதான செய்தியை ஏவலர் மூலம் சொல்லி விடுகின்றான். அவர் வந்து கூறத், தலைவியின் உடனிருந்தாளான தோழி, தலைவி அவனை ஏற்றலே செயத்தக்கது என்னும் கருத்தினளாயினும், தலைவனின் கொடுமை கூறிப் பழித்து, அவள் இசையாள் என மறுத்து அவரைப் போக்க முற்படுகின்றாள். அப்போது, தலைமகள், தான் இசைவதாகச் சொல்லியனுப்புகின்றாள். அவள் செவ்வியை வியந்து போற்றிய தோழி, தலைவன் வந்தபோது, அவனுள்ளத்தில் படுமாறு, அதனைப்பற்றி உரைக்கின்றதாக அமைந்த செய்யுள் இது. ]

புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை,
மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;

பாணர் நரம்பினு மின்கிள வியளே.