பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

169


தெளிவுரை : புனலாடச் செல்வாரான பெண்கள் இட்டுச்சென்ற ஒள்ளிய அணிகலன்களை, அம் மணற்குன்றில் மேலிருந்து எருமைகள் கிளைத்து வெளிப்படுத்தும், புதுவருவாயினையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான், பாணரது இசையெழுப்பும் யாழினது நரம்பினுங்காட்டில் இனியவான சொற்களையும் உடையவள்காண்!

கருத்து: 'என்றும் இனியவே பேசுபவள் என் தலைவி' என்று போற்றியதாம்.

சொற்பொருள்: சிமையம் - உச்சி. கிளைக்கும் - காற் குளம்பாலும் கொம்பாலும் கிளைத்து வெளிப்படுத்தும். பாணர் நரம்பு - யாழ் நரம்பு; அதில் இசைத்தெழும் இன்னிசை சுட்டிற்று. கிளவி - பேச்சு.

விளக்கம்: 'புனலாடப் போவாரான மகளிர்கள், தாம் மணற் குன்றின்மேலே புதைத்துவைத்து, பின் மறந்து போயின ஒள்விய இழைகளைத், தான் மணலைக் கிளைத்து ஆடி மகிழ்ந்திருக்கும் எருமையானது, கிளைத்து வெளிப்படுத்தும் யாணர் ஊரனின் மகள்' என்றனள். இஃது எருமைகளும்கூடப் பெண்டிர்க்குத் தம்மையறியாதேயே உதவுகின்ற இயல்புடைய ஊரனின் மகள் தலைவி என்றதாம். ஆகவே, அம்மகளிர் தம் ஒள்ளிழைகளைச் சிலகாலம் இழந்தாற்போல் கவலையுறினும், மீளவும் அவற்றைப் பெறுவர் என்பதாம். அவ்வாறே, சிலநாள் நின்னைப் பிரிந்து வருந்தினும் மீளவும் பெறுவோம் என்ற நம்பிக்கையிலே உறுதிகொண்டாளாதலின், நின் வரவை உவந்தேற்று இன்சொற் கூறினள் என்று. தலைவியின் குடிமரபின் வந்த சால்பைப் போற்றியதாம்.

புனலாடு மகளிர்தம் ஒள்ளிழைகள் புனலிடத்தே வீழ்ந்து போகாமற் படிக்கு, அவற்றைத் தாம் எளிதாக அடையாளங் கண்டு எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, மணல்மேட்டு உச்சியிலே வைத்துவிட்டுச் சென்று நீராடுவர். அப்படி வைத்தவற்றைக் காற்றாலும் பிறகாரணத்தாலும் மேல்விழுந்து மணல் மூடிமறைக்க, அவரும் காணாதே கலங்கி வருந்துவர். மணல் கிளைத்தாடும் எருமை அதனைக் கிளைத்து வெளிப்படுத்தி, அவருக்கு மகிழ்வூட்டும் என்று கொள்க.

உள்ளுறை: 'மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்கும் ஊரன் மகள்' என்றது, இப்போது வாயில் நேர்தலேயன்றிக் களவுக்காலத்து நீ செய்த நன்மை மறைந்தனவும்