பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



174

ஐங்குறுநூறு தெளிவுரை


உருவாயினர். தாமே தனித்தும், தமக்கு உதவப் பலரையும் அமைத்தும், இவர்கள் பெருவளமையோடு தம் தொழிலாற்றி வாழலாயினர்.

இந்தப் பண்டமாற்றமும், இதன் பயனாகக் குவிந்த பெருவளனும், மக்களிடையே தத்தம் விளைவுகளை 'விலைப்படுத்தி' அதற்கீடாகத் தத்தம் தேவைப்பொருள்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பண்டமாற்றல் மனப்பாங்கை உருவாக்கின. ஆகவே, மிகுபொருள் குவிக்கக் கருதிய மனவன்மையாளர்களும் தோன்றினர். தம் உரிமைகளை வலியுறுத்திப், பிறர் நலத்தைத் தமதாகக் கவரலாயினர். இதுவே சமுதாய நெறிமரபாக, அவர்தம் வலிமைக்கு எதிர் நிற்கவியலாத பிற மக்களாலும் ஏற்றுக்கொள்ளப் பெற்றபோது, சமுதாய மக்கள் மேற்குடியினரும் கீழ்க்குடியினருமாக இருவகையாற் பிளவுற்றனர். பிறர் பணிகொண்டு தாம் இனிது மனம்போல் வாழும் உயர்குடியினரும், அவர்க்குப் பணிசெய்தே தம் வாழ்வியலை நடத்தும் ஏவல் உழைப்பாளருமாகத் தமிழினமும் இருவேறு நிலையினதாகிப் பிளவுபட்டது. உயர்குடியினரும் வளமாகவும், வசதிகளோடும், பலர் உவந்து பணிசெய்யத் தம் மனம் விரும்பியவாறு களிப்போடே வாழ்ந்தனர். பொதுநெறிகள் அவர்களைச் சாராதே அன்றும் ஒதுங்கி நின்றன. ஒன்றிவாழும் உரிமையினராக வாழ்ந்த மகளிருட் சிலர் அவர்களாற் காமப்பொருளாகவும் மதிக்கப்பட்டு நிலை தாழ்ந்தனர்.

இத்தகைய நிலையிலே, நாகரிகமென்னும் பெயரோடு தமிழ்ச் சமுதாயம் நிலவிய நாளில், இலக்கியம் படைத்த தமிழ்ச்சான்றோரும், அத்தகைய சமுதாய ஒழுக்க நிலைகளின் வழிநின்றே, தம்முடைய சொல்லோவியங்களை உருவப்படுத்திச் சென்றனர்.

அம்முறையிலே, 'பெருமணல் உலகம்' என்னும் நெய்தல்நில மக்களின் அகவொழுக்கச் செல்வங்களைக் காட்டிச் செல்லும், நூறு குறுஞ்செய்யுட்களைக் கொண்ட நுட்பமான பகுதி இதுவாகும்.