பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



176

ஐங்குறுநூறு தெளிவுரை


பழந்தமிழ்ப் பெயர்களுள் இஃதும் ஒன்றாகும். மூவன், மூதில், மூதூர், மூதுரை, மூப்பு,மூப்பன், மூத்தாள், மூத்தான், மூவேந்தர் என்றெல்லாம் வழங்கும் மூமுதற்பெயர்களும் தொன்மையையே சுட்டுவதைக் காணலாம். இனி, இவரை 'அம்மூ' என்னும் அன்னைப் பழந்தெய்வத்தின் பெயரோடு ஆண்பால் விகுதி பெற்றமைந்த 'அம்மூவன்' என்னும் பெயரினர் என்றும் சொல்லுவர் சிலர். இதுவும் பொருந்துவதே!

இந் நெய்தலுக்குரிய சிறுபொழுது ஏற்பாடு ஆகும். அதனை ஓர் அழகோவியமாகவே வடித்துக் காட்டுவர். உரையாசிரியர் நச்சினார்க்கினியனார். அவர் உரைப்பதனை அப்படியே அறிந்து இன்புறல் நன்று அவ்வளவு நயமலிந்த சொற்சித்திரங்கள் அவை.

"செஞ்சுடர் வெப்பம் தீரத்,தண் நறுஞ்சோலை தாழ்ந்து நீழல் செய்யவும் -

"தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து, பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம், குடம்பை நோக்கி உடங்கு பெயரவும் -

"புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும் -

"நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும் -

"காதன் மிக்குக், கடற்கானும் கானத்தானும் நிறை கடந்து, வேட்கை புலப்பட உரைத்தலின் -

"ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் -

"ஏற்பாடு நெய்தற்கு வந்தது" என்பன அவர்தம் சொற்கள்.

உணர்வெழுச்சிகளுக்குக் காலவமைதியும், நிலவமைதியும், பிறபிற வமைதிகளும் எவ்வளவு காரணமாகின்றன என்னும் மனவியல் நுட்பத்தை, நாமும் இதனைக்கொண்டு உளம்நிறுத்துவோமாகி, இச்செய்யுட்களைக் கருத்துடன் கற்போமாக.