பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



178

ஐங்குறுநூறு தெளிவுரை


தேர் வருதலைக் கண்டாள் தோழி. வரைவொடு அவன் வருதலாலே, இனித் தலைவியின் துயரமெல்லாம் அகலும் என்னும் களிப்போடே, அவனுக்கே அவளை மணமுடிக்கத் தன் தாயான செவிலியின் துணையையும் நாடியவளாக, அத் தேர்வரவைக் காட்டி, தலைவியின் களவுறவையும், அவனையே அவள் மணத்தற்கு உரியவள் என்னும் கற்பறத்தையும் சொல்லி வலியுறுத்துகின்றாள்.]

அன்னை வாழி! வேண்டு அன்னை! உதுக்காண் -
ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய

நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே!

தெளிவுரை : வாழ்க அன்னையே! யான் நின்பாற் சொல்லும் இதனையும் விருப்போடே கேட்பாயாக. அதோ பாராய்! அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது, இவளுக்குரியவனான தலைவனின் தேர்! நின் மகளின், நீலப்பூப்போலும் மையுண்ட கண்களிலே பொருந்தியிருந்த ஏக்கமென்னும் நோய்க்கு மருந்தாகித் திகழக்கூடியவன், அவனேதான்!

கருத்து: 'அவனை இல்லத்தார் விரும்பி வரைவுக்கு உடன்படுமாறும் செய்வாயாக' என்றதாம்.

சொற்பொருள்: உதுக்காண் - அங்கே அதோ பாராய். ஏர்கொடி பாசடும்பு - அழகிய கொடியோடே பசுமையாக விளங்கும் அடும்பு: இதனைக் குதிரைக்குளம்புக் கொடி என. இதன் இலையமைதி நோக்கி, இந்நாளிற் பலரும் கூறுவர். ஊர்பு இழிபு - ஏறியும் இறங்கியும்; தேர்ச்சக்கரம் ஏறியிறங்கக் கொடிகள் அறுபட்டு சிதைபட்டுப்போகும் என்பதாம்; மயக்கி- சிதைத்து ; இது கழியைக் கடக்கும்போது நெய்தற்கு நிகழ்வது. கொண்கன் - நெய்தல் நிலத் தலைமகன். 'கொண்கன் தேர்' என்றது, அவனது செல்வப் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.

விளக்கம்: 'நோய்க்கு மருந்தாகிய கொண்கன்' என்றது, அவன் நினைவே தலைவிக்கு நோய் தந்தது' என்னும் அவர்கள் களவுக்காதலையும் சுட்டி, 'அது தீர மருந்தும் அவனே' எனக் கற்பினையும் காட்டி வலியுறுத்தி,அறத்தொடு நின்றதாம்.