பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

179


'பூப்போல் உண்கண் மரீஇய நோய்' என்றது, அவள் வரவு நோக்கிநோக்கிப் பலநாளும் ஏங்கித் துயருற்று, ஒளியிழந்து நோய்ப்பட்ட கண்கள் என்றதாம். 'நின் மகள்' எனத் தலைவியைக் குறித்தது, அன்புரிமை மிகுதி பற்றியாம்.

உள்ளுறை: 'அடும்பு பரியவும் நெய்தல் மயங்கவும் தேர் விரைய வந்தது' என்றது. அலருரைத்துக் களித்தாரின் வாயடங்கவும், உரியவர் தம் அறியாமையினை எண்ணி வருந்தவும், தலைவன் வரைவொடு, ஊரறிய, வெளிப்படையாகத் தன் பெருமிதம் தோன்ற வந்தனை என்றதாம்.

மேற்கோள்: திணை மயக்குறுதலுள், நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது' என்று நச்சினார்க்கினியர், இச்செய்யுளைக் காட்டுவர் - (தொல். அகத் 12 உரை).

குறிப்பு: தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலான குறிஞ்சித்திணை ஒழுக்கம், இங்கே நெய்தற்கு ஆகிவந்தது. 'உதுக்காண்' என்னும் சொல்லிலே தோன்றும் களிப்புணர்வும் எண்ணி மகிழ்க.

102. தேர் மணிக் குரல்!

துறை: மேற்செய்யுளின் துறையே இதுவும்.

அன்னை வாழி! வேண்டு அன்னை! நம்மூர்
நீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது.
துன்புறு துயரம் நீங்க,

இன்புற இசைக்கு மவர் தேர்மணிக் குரலே!

தெளிவுரை : வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. நம் ஊரிலுள்ள நீலநிறப் பெருங்கடலிடத்துப் புள்ளினைப் போல. நி மகள் இடைவிடாதே வருந்தித் துன்புறும் அந்தத் துயரமானது நீங்கவும், நாம் அனைவரும் இன்புறவும், அவர் தேர்மணியின் குரல் அதோ இசைப்பதனை நீயும் நன்கு கேட்பாயாக!

கருத்து: 'அவனோடு இவளை மணப்படுத்தற்கு ஆவன செய்க' என்றதாம்.


சொற்பொருள்: புள் - கடற்புள்: நாரையும் கடற்காகமும் குருகும் போல்வன. ஆனாது - இடைவிடாது; ஒழிவில்லாமல்.