பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



184

ஐங்குறுநூறு தெளிவுரை


தலைவியின் உள்ளப் பூரிப்பால் அவள் நெற்றியின் பசலையும் மாறிப் பொன்னிற் சிறந்த ஒளியோடே அழகுற்று விளங்கியதனை வியந்து, தோழி, செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அன்னை வாழி! வேண்டு அன்னை - முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்

பொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே!

தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் காண்யாயாக! முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடத்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும், இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புதிய ஒளிபெற்றதனை நீயும் காண்பாயாக.

கருத்து: "அவள் களிப்பும் காதலும் அத்தகையது" என்றதாம்.

சொற்பொருள் : முழங்கு கடல் திரை - முழக்கோடே வரும் கடல் அலை. திரைதரு முத்தம் - அலைகள் தாமே கொண்டு போட்டுச் செல்லும் முத்தம். பொன் - செம்பொன். 'சின்'; முன்னிலை அசை.

விளக்கம் : 'அவன் வரவே அவள் நுதலில் அழகுபடரச் செய்யின், அவர்களின் பிரிவற்றதாக உடனுறையும் இல் வாழ்வுதான் எத்துணை இன்பம் மிகுக்கும்' என்றதுமாம். திரைகள் முத்தைத் தாமே கொண்டு வெண்மணல் சேர்ப்பதை, ’இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்' (அகம் - 180) எனப் பிறரும் காட்டுவர். தமிழ்க் கடல் வளமை, அத்தகையது.

உள்ளுறை : 'முழங்கு கடல் திரை தருகின்ற முத்தம், வெண்மணலிடையே கிடந்து இமைக்கும் துறைவன்' என்றது அவன் பெருமுயற்சியின்றியே, தலைவியின் பெற்றோர்கள் விரும்பிய பொருளைத் தேடிவந்து குவித்துத், தலைவியை மணத்தோடு அடைந்தனன் என்பதைக் கூறியதாம். அவன் உயர்வு வியந்ததும் இது.

மேற்கோள்: 'தோழி கூற்று; நொதுமலர் வரைவுபற்றி வந்த முன்னிலைக் கிழவி' என்று காட்டுவர். இளம்பூரணர் -