பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



186

ஐங்குறுநூறு தெளிவுரை


இறந்தே படுதலும் கூடுமே!" என்கின்றனள் தோழி. இதனால் வேற்றுவரைவும் விலக்கினள்; அறத்தொடும் நின்றனள்.

உள்ளுறை: 'அன்னம் வளையினைத் தன் துணையாகக் கருதிச் சென்று மிதிக்கும் நாட்டினன் தலைவன்' என்றது. 'அவன் இவள்பாற் பெருங்காதலுடையவன் எனினும், இவளை உடனே வரைந்து கொள்வதற்கு முயலாது, வேறுவேறு செயல்களிலே ஈடுபட்டு மயங்கி உழல்வான்' என்றதாம்.

குறிப்பு: வெண்மையொன்றே கருதி அன்னம் துணையென மயங்கினாற்போல, நிவிரும் இவள் மெலிவொன்றே நோக்கி, இஃது வேறு பிறவற்றால் (தெய்வம் அணங்கியதால்) ஆயிற்றெனக் கொண்டு மயங்குவீர் ஆயினீர்; அதனைக் கைவிடுக என்றதுமாம். நறுநீர்ப் பறவையான அன்னத்தைக் கூறியது திணைமயக்கம் என்று கொள்க.

107. யானே நோவேன்!

துறை: தோழி, செவிலிக்கு, அறத்தொடு நிலை குறித்துக் கூறியது.

[து. வி.: அறத்தொடு நின்று, 'தலைவியை, அவள் களவுக் காதலனாகிய தலைவனுடன் மணம்புணர்த்தலே மேற்கொள்ளத் தக்கது' என்று தோழி செவிலிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவும் ஆகும்.]

அன்னை வாழி! வேண்டு அன்னை! - என் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலிந்து
தண்கடற் படுதிரை கேட்டொறும்

துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே!

தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. என் தோழியான தலைவியானவள். தன் ஒளி சுடரும் நுதல் பசலை நோயடையத் தளர்வுற்றனள்; மென்மேற் படரும் காமநோயாலும் மெவிவடைந்தனள்; குளிர் கடலிடத்தே மோதியெழும் அலைகளின் ஒலியை இரவிடையே கேட்கும்போதெல்லாம் கண் உறங்காதாளும் ஆயினள்! அதுகுறித்தே யானும் வருந்துவேன்!

கருத்து: 'அவள் நலனை நினைத்தேனும் பொருத்துவன் உடனே செய்க' என்றதாம்.