பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

191


அன்னை வாழி! வேண்டு அன்னை! - புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே - இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்

ஆங்கும் ஆக்குமோ? வாழியே பாலே!

தெளிவுரை : வாழிய அன்னையே! யான் கூறும் இதனையும் நீ விரும்பிக் கேட்பாயாக. பொன்னின் நிறத்தைக் கொண்டவாக இதழ்விரிந்து மலர்ந்திருக்கும் புன்னைப்பூக்கள் மலிந்த துறைவனான தலைவனையே, யாம் 'எமக்குரியனாகிய தலைவன்’ என்று கொள்வோம். ஆயின், இவ்வூரில் உள்ளவரோ, மற்றொன்றாகச் சுட்டிக் கூறாநிற்பர். ஊழ்தான் அவ்வண்ணமும் ஆகச் செய்யுமோ? செய்யாதாகலின், அதுதான் வாழ்க!

கருத்து: 'ஊழே கூட்டிய உறவாதலின், அது எதனாலும் மாறுதல் அன்று' என்றதாம்.

சொற்பொருள் : பொன்னிறம் விரியும் - பொன்னிறத்தோடே இதழ் விரியும். என்னை - என் ஐ; என் தலைவன். பால் - ஊழ். ஆங்கும் - அவ்வாறும். ஆக்குமோ - செய்யுமோ?

விளக்கம்: "ஊழ் கூட்டிய உறவே தலைவனோடு பெற்ற களவுறவாதலால், அதுதான் கடிமணமாகி நிறைவுறவும் அவ்வூழே துணை நிற்கும்; அதனின் மாறுபடக் கூறுவார் கூற்றெல்லாம் பொய்ப்படும்" என்றதாம். 'புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்றது, அதனைக் காணும் அவன், தலைவியை வரைவொடு சென்று மணத்தலிலேயும் மனம்செலுத்துகிற வனாவான் என்பதாம்.

உள்ளுறை : துறையும் புன்னையின் பொன்னிறம் விரிந்த பூக்களின் மிகுதியினாலே அழகும் மணமும் பெறுகின்றதனைச் செய்யும் விதியே, அத்துறைவனையும் எம்மோடு மணத்தால் இணைத்து எமக்கு அழகும் மணமும் கூடிய நல்வாழ்வு வாய்க்கச் செய்யும் என்றதாம்.

மேற்கோள்: வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவிகூறல் இது என்பர் இளம்பூரணனார் - (தொல். களவு. 20). இறந்துபாடு பயக்குமாற்றால், தன் திறத்து அயலார் வரையக்கருதிய ஞான்று, அதனை மாற்றுதற்குத் தலைவி கூற்று நிகழும் எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு. 20). இவர்கள் கருத்து, இது தலைவி கூற்று என்பதாம். அவ்வாறு கொள்வதும் பொருந்தும்; அவளும் அறத்தொடு நிற்றல் இயல்பாதலின்.