பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



194

ஐங்குறுநூறு தெளிவுரை


பேச்சிலே தமக்கு நிலையான இன்பமே கருதினான்போல உறுதி காட்டி, அதனை வாய்மையாகக்கொண்டு நாம் பற்றிக்கொள்ளவும், நம்மை அருளின்றி அழியச்செய்யும் இயல்பினன் ஆயினான் அவனும்' என்பதை உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.

112. வரக் காண்குவோமே!

துறை: களவு நீடுவழி, 'வரையலன் கொல்' என்று அஞ்சிய தோழிக்கு, தலைமகன் வரையும் திறம் தெளிக்கத், தெளிந்த தலைமகள் சொல்லியது.

(து. வி. தலைவன் தலைவியரிடையே களவுறவே தொடர்ந்து நீடிக்கின்றதனைக் கண்ட தோழி, 'இவன் இவளை வரைவான் அல்லன் போலும்!' என்று நினைத்து அஞ்சுகின்றாள். குறிப்பால் அதனை அறிந்த தலைவன், தான் தலைவியை வரைவதற்கான முயற்சிகளைச் செய்துவருதல் பற்றிக்கூறித் தலைவியைத் தெளிவு படுத்துகின்றான். அவள், தன் தோழியின் அச்சம் நீங்கக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே

மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே!

தெளிவுரை : கேட்பாயாக தோழி! பசிய இலைகளையுடைய செருந்திமரமானது பரந்து கிளைத்திருக்கும் பெரிய கழியினையுடைய சேர்ப்பன், நம்மைத் தெளிவித்தபோது சொல்லிய உறுதிமொழிகளை எல்லாம், நாணத்தையுடைய நெஞ்சினேமாதலின், நாம் போற்றாதே மறந்தேமாய், அவன் வரைவொடு விரைய வராமைபற்றியே அஞ்சிக் கலங்கினோம். அவன், தான் சொன்னவாறே வரைவொடு வருதலையும், இனி நாமே விரைவிற் காண்போம்!

கருத்து: "அவன் சொற்பிழையானாய் வந்து நம்மை மணப்பான்" என்றதாம்.

சொற்பொருள் : பாசிலை - பசுமையான இலை. செருந்தி - நெய்தற் பாங்கிலே செழித்து வளரும் மரவகையுள் ஒன்று. இருங்கழி - கரிய கழி.

விளக்கம்: 'செருந்தி தாய' என்பதற்கு, செருந்தி மலர்கள் உதிர்ந்து கிடத்தலையுடைய எனவும், செருந்தி