பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



196

ஐங்குறுநூறு தெளிவுரை


கேட்டுச் சினந்தாளான செவிலித்தாய், என்னை நோக்கி, 'அன்னாய்!' என்றனள். யானும் மெல்ல மெல்ல, 'எம்மை' என்ற சொல்லைக் கூறினேன்.

கருத்து: 'அவள் நற்றாயிடம் உரைக்க, இனி நாம் இற்செறிக்கப்படுதல் உறுதியாகும்' என்றதாம்.

சொற்பொருள்: ஓங்குதிரை - ஓங்கி உயர்ந்தெழும் கடலலை. உடைக்கும் - அலைத்துச் சிதறச் செய்யும். ஊரார் - அலருரைக்கும் இயல்பினரான ஊர்ப்பெண்டிர். பெண்டு - மனையாள். அன்னாய் - அன்னையே: இஃது அலர் சொல்வது மெய்யோ என வினவிய சினத்தால் எழுந்த ஒரு குறிப்புச் சொல்.

விளக்கம்: ஓங்கு திரை வந்து மோதிமோதி வெண்மணலை அலைத்து வருத்தலேபோல, அலருரைக்கும் பெண்டிர்கள் தம் பழிச்பேச்சால் நம்மை மிகவும் அலைத்து வருத்துவாராயினர் என்பதாம். 'எம்மை" என்றது கேள்வியின் விடையாக, 'எம்மையோ பழித்தனர், அதனை நீயும் நம்புதியோ?' எனச் செவிலியைத் தெளிவிக்கக் கூறியதாம். 'வெம்மை' என்றே கொண்டு, அவர் சொல்லும் பழிதான் கொடியது எனச் சொல்லித் தெளிவித்ததாகவும் கொள்க; "எம். ஐ' எனப் பிரித்து, 'ஆம், அவனே எம் தலைவன்' எனக் குறிப்பாற் புலப்படுத்திய தெனலும் பொருந்தும்.

மேற்கோள்: ஈண்டு பெண்டென் கிளவி என்றே பாடங் கொள்ளவேண்டும். 'ஊரார் பெண்டென மொழிய எனச் சான்றோர் கூறலின் என நச்சினார்க்கினியரும் - (தொல். பெயர். 9) உரைப்பர். பெண்டென்றதனைக் கேட்டு, அன்னாயென்றனள் அன்னை' என அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு இதுவென்றும் அவரே களவியலுள்ளும் காட்டுவர் - (தொல். களவு. 24.).

உள்ளுறை : 'ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவன்' என்றது, அவனும் தான் வரைவொடு வந்து நம்மை மணந்துகோடலினாலே, அலர்வாய்ப் பெண்டிரின் வாயடங்கச் செய்வான் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.

114. நாம் செல்குவமோ?

துறை : இடைவிட்டு ஒழுகும் தலைமகன், வந்து. சிறைப்புறத்தானாயினமை அறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது.