பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



198

ஐங்குறுநூறு தெளிவுரை


பொருந்தும். 'நேரேமாயினும்" என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்கவியலாமல் செய்துவருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.

உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்று சொன்னது, அவ்வாறே தன் செயலால் நம்மை இடையிற் பலநாட்கள் மறந்திருந்த தலைவன், முடிந்ததும், இப்போது வந்து, நம்மை யழைத்தானாகக் குரலெழுப்புகின்றான்" என்பதாம்.

பாடபேதங்கள்: கொண்களை, நேரேனாயினும், பெண்ணையவருடை.

115. அன்னை அருங்கடி வந்தோன்!

துறை : இற்செறிப்புண்ட பின்னும், வரைந்துகொள்ள நினையாது, தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள். அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவியின் களவுபற்றிய ஊரலரும், அவள் அழகழிந்த நிலையும், அவளை ஐயுற்று இற்செறிப்புக்குத் தாயை உட்படுத்தச் செய்தன. தோழி மூலம் இஃதறிந்தும், வரைந்து வராதே காலம் கடத்தி வந்தான் தலைவன். அவன், ஒரு நாள் இரவு, தலைவியின் வீட்டுப் பக்கம் வந்து நின்று, தன் வருகையை அறிவிக்கும் குறிப்பொலியைச் செய்ய, தோழியுடன் அவ்விரவுக் குறியிடத்தே வந்திருந்த தலைவி, தலைவன் உள்ளத்திலே தம் துயரம்பற்றிய தெளிவு ஏற்படுமாறு, தான் தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி தோழி! பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ,

அன்னை அருங்கடி வந்துநின் றோனே!

தெளிவுரை : வாழ்வாயாக தோழி! இதனையும் கேட்பாயாக: பலவான காட்சிகளையுடைய, நுண்மணல் செறிந்த கடற்கரையிடத்தே. நம்மோடும் கூடியாடினவனாகிய, குளிர்ந்த