பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

ஐங்குறுநூறு தெளிவுரை


செந்தமிழ்ப் புலவரான இப் பெருந்தேவனார், வடமொழியாளரோடும் தொடர்புகொண்டு, அம் மொழியினும் சிறந்த புலமைபெற்று, தன்கண்ணுள்ள மாபாரதக் கதையினைத் தமிழிற் செய்யுள் வடிவிலே பாடினவர். பிறமொழியறிவுபெற்ற பெருந்தமிழர்கள், அவ்வறிவுநலத்தால் தமிழ்நலமே பேணி மிகுத்துவந்தனர் என்பதும், வரவேண்டுவதே கடனென்பதும், இவர் அரும்பணியாற் காணலாம். இவர் செய்த மாபாரதச் செய்யுட்கள் இந்நாளில் முற்றவும் மறைந்தனவேனும், இவர் செய்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் மட்டும், இன்றும் நின்று, இவர் பெரும்புலமைக்குச் சான்று பகரவும் செய்கின்றன; தமிழுக்கு வளமும் சேர்க்கின்றன.

'தேவு' என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து உமா மகேசனைக் குறித்துவந்த 'பெருந்தேவன்' பெயரைப் பெற்றவர் இவர். பிற பெருந்தேவனார்களினும் வேறுபடுத்திக் காட்டும்பொருட்டாக, இவர் செயல்களினுள் போற்றுதற்கு உரித்தாக விளங்கிய 'பாரதம் பாடிய' புகழைச் சேர்த்து, இவரைப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' எனத் தமிழ்ச்சான்றோர் போற்றிவந்தனர். தென்தமிழ் நாட்டின் மறவர் குடியினருக்குள் வழங்கிவரும் 'தேவர்' என்னும் பெயரும், தமிழகப் பெரியோர்களுக்கு வழங்கிவரும் 'நக்கீர தேவர்', 'மெய்கண்ட தேவர்', 'அருணந்தி தேவர்', க'ருவூர்த் தேவர்' என்றாற் போல்வனவும், இச்சொல்லின் பரந்த பழந்தமிழாட்சியைக் காட்டும்.

பின்னர்த் தோன்றிப், பாரதத்தை வெண்பா யாப்பிலே பாடினவர் மற்றொரு பெருந்தேவனார் என்பவர்; பெயரை நோக்கின், அவரும் இவர் மரபினரே ஆகலாம். அதுவும் பெரும்பகுதி காலச்சேற்றில் கரைந்து மறைந்துவிட்டது. அதன்பின்னர், வில்லிப்புத்தூரார் விருத்த யாப்பிலே செய்த வில்லி பாரதமே, இன்று வழக்கிலிருந்துவருகின்ற பாரதத் தமிழ்ச் செய்யுளாக்கமாகும்.

இச் செய்யுள், 'சிவசக்தி'யாக ஒன்றித் தோன்றும் இறைமையின் அருள்வடிவைக் குறித்துப் போற்றும் சிறந்த