பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

205


வரைவொடும் வருதலாலே தலைவியும் புதிதான அழகு பெறுவாள் என்க.

'மல்லல் இருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன்' அவன் ஆதலின், அவனும் மிகத்தண்மையுடையான்; நமக்கு வெம்மை மிகுக்கானாய் இனி வரைந்து வருவான் என்று சொன்னதாம்.

மேற்கோள்: 'பெற்றவழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்' என்று இளம்பூாணனாரும்- (தொல். களவு. 21); 'தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப்பெற்ற ஞான்று புதுவது மலியின், அவளுக்குக் கூற்று நிகழும்" என நச்சினார்க்கினியரும் - (தொல். களவு, 20), இச் செய்யுளைக் காட்டிக் கூறுவார்கள்.

இப் பத்துச்செய்யுட்களும், பழந்தமிழ்க் காதல் வாழ்வில் தோழியின் சிறப்பான இடத்தை உணரச் செய்வனவாகும். உயர்குடிப்பிறந்து, குடித்தகுதியும் மரபும் பிறழாதே வாழும் தலைவி, பெரும்பாலும், இல்லத்துப்புறம்போந்து உலகநடையும் பிறவும் அறிந்து தெளிதற்கு வாய்ப்பற்றவளாகவே இருப்பள். இந்நிலையிலே அக்கட்டுப்பாட்டு வேலி தடைசெய்யாதே எங்கும் செல்லவும், எவருடனும் பேசிப்பழகும் உரிமையும், அதற்கேற்ற மனவுறனும் பெற்றவளாகத் திகழும் தோழி, தலைவியினும் எதையும் முடிவுசெய்யும் அறிவாற்றல் உள்ளவளும் ஆகின்றாள். மேலும், பாசத்தாலே அறிவின் நிதானத்தைத் தவறவிடும் நிலைமையும் அவள்பால் இல்லை. இத்துடன், தலைவியின் நல்வாழ்விலே அவன் மிகவும் அக்கறையும் பொறுப்பு உணர்வும் மிக்கவள். அவள் இன்பதுன்பங்களைத் தன்தாகவே கருதிப் பேசும் பாங்கினள். எனவே, அவள் உடன்பாடு தலைவன் தலைவர்க்கு மிகவும் தேவையாகின்றது. இல்லத்தாரும் தலைவியின் உறுதுணையாகத் திகழும் அவளிடமே, தலைவியின் நினைவும் செயலும் பற்றிய பலவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கின்றது.

நாணமும் மடமும் குடிப்பண்பும் தலைவியின் பேச்சைத் தடைசெய்வன போலத் தோழியின் பேச்சைத் தடுப்பனவல்ல. அவள் பேச்சிலும் செயலிலும் தெளிவும் தணியும் உடையவள். இப்படி ஒரு துணையை வகுத்துள்ள இலக்கியப் பாங்கும், அதற்குள்ள பொறுப்பான நிலையும் மிகவும் வியக்கற்பாலனவாம்.