பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

207


துறையமைதியுடனும் அமைந்த பத்துச் செய்யுட்கள் இவை. 29, 30 ஆம் செய்யுட்கள் காணப்பெறவில்லை; அதனை அறிந்து வருந்த வேண்டும்.]

கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே!
முண்டகக் கோதை நனையத்

தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே!

தெளிவுரை : கொண்கனே! கழிமுள்ளிப் பூவாலே தொடுத்தணிந்த தன் தலைக்கோதை நனையுமாறு. தெளிந்த அலைகளையுடைய கடலின் கண்ணே பாய்ந்து, தான் தனியளாக நீராடி நின்றவளான, நினக்கு உறவுடையாளை, யாமும் அன்று கண்டனம் அல்லமோ!

கருத்து: 'யாம் கண்டதை மறைத்துப் பொய்கூறேம்' என்றதாம்.

சொற்பொருள் : கண்டிகும் அல்லமோ - கண்டேம் அல்லமோ: தலைவனும் தானும் கண்டிருந்த நிகழ்ச்சியை நினைவு படுத்திக் கூறியது; 'இகும்' என்னும் இடைச்சொல் தன்மைக் கண்ணும் வந்தது இது - (தொல். இடை. 27. இளம், நச், சேனா.) முண்டகம் - கழிமுள்ளி; முண்டகப் பூவைக் கோதையாகக் கட்டிச் சூடிக் கடலாட்டயர்வது நெய்தன் மகளிரின் இயல்பாதலை இதனால் அறியலாம். பௌவம் - கடல். நின்றோள் - நீராட்டயராதே நின்னை இன்னொருத்தியுடன் கண்டதும் செயலற்றுக் கோதை நளைய நின்றவள். கேள் - உரிமை கொண்டவள்.

விளக்கம் : நீராடி நின்னோடும் மகிழ்தற்குத் தன்னைப் புனைந்தவள், நீதான் வேறொருத்தியோடும் நீராட்டயர்தலைக் கண்டதும், தான் தனியளாகக் கடலிற் பாய்ந்து, நின் செயலாலே மனம்வருந்தித் தன் முண்டகக்கோதை நனையத்தான் நீராடாமற் செயலற்று நின்றனளே! அவளை யாமும் கண்டேம் அல்லமோ! ஆதலின் மறைத்துப்பயனில்லை; தலைவியை இரந்து வேண்டித் தெளிவித்து, அவள் இளமைவேகமும், அவள் நினக்கு உறவாட்டியென்னும் உண்மையும் உணர்ந்தாயாய் நடப்பாயாக என்றதாம். 'பரத்தை சொன்னதாகக் கொள்ளில், 'நிவி கேள் அவ்வாறு நின்றது கண்ட நீ, அவள்