பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

209


(தொல். கற்பு. 6) எனவும், தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகனது குறிப்பினை அறிதற்கும் உரியள் - (தொல். பொருள். 38) எனவும், இளம்பூரணனார், தலைவி கூற்றாகவே இச்செய்யுளைக் காட்டுவர்.

திணைமயக்குறுதலுள் இப்பத்தும் நெய்தற்கண் மருதம்; இவை பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித். தலைவன் குறிப்புணர்ந்தது - (தொல். அகத். 12) எனவும்; தலைவன் வரையக் கருதினாளோர் தலைவியை, 'இனையள்' எனக் கூறி, அவள் மாட்டு இவன் எத்தன்மையன் என்று வியப்புற்றுக் கூறியது! இது தலைவன் கூற உணராது; தான் வேறொன்று கூறி, அவன் குறிப்பறியக் கருதுதலின் வழுவாய் அமைந்தது - (தொல். பொருள். 40) எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். முதலில் தலைவி கூற்றாகவும், பின் தோழி கூற்றாகவும் அவர் கொள்வதும் ஓர்க.

உள்ளுறை: வெள்ளாங்குருகு ஒள்ளிழை தேடித் தராதவாறு போல, அவளை நாடும் நின் நாட்டமும் என் வழியாக நினக்குப் பயன்தராது என்று கொள்க.

123. ஆயும் ஆர்ப்பத் திரை பாய்வோள்!

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
ஓண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்

தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே!

தெளிவுரை: கொண்கனே! ஒளியமைந்த நெற்றியையுடைய ஆயமகளிர்கள் பலரும் ஆரவாரம் செய்ய, தண்ணென விளங்கும் பெருங்கடலிலே, அலையிற் பாய்ந்து கடல்நீர் ஆடுவாளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேமல்லமோ?

கருத்து: "ஏன் பொய்யுரை புகல்கின்றனை?" என்றதாம்.

சொற்பொருள்!: ஆயம் - ஆயமகளிர்; விளையாட்டுத் தோழியர். ஆர்ப்ப - ஆரவாரித்து ஒலி எழுப்ப.

விளக்கம்: அலையிலே பாய்ந்தாடுவாளை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சியினாலே, கரையிலுள்ள தோழியர் ஆரவார ஒலி எழுப்புவர் என்பதாம். அந்த ஒலியால் எம் கவனம் ஈர்ப்புற அவளை, அங்கே யாமும் காண நேர்ந்தது என்றதாம்.

ஐங். -- 14