பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



216

ஐங்குறுநூறு தெளிவுரை


நீயோ வந்து இப்படிச் சொல்வது?' என்று பாணனைச் சுட்டிச் சினந்து கூறியதும் ஆகும்.

மேற்கோள் : இது நெய்தற்கண் மருதம். தலைவன் புறுத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 12).

134. கொண்கனோடு கவினும் வந்தது!

துறை : பிரிவின்கண், தலைமகள் கவின்தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத், தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது.

[து. வி.: தலைமகன் பிரிவாலே தலைவி கவின் இழந்தாள். அதனைக் கண்டு, அது தகாதென்று ஒதுங்கிச் சென்றனன் பாணன். தலைமகன் வந்துசேர அவள் கவினும் மீண்டும் வந்துவிடுகின்றது. அப்போது, அவள் பாணலுக்குத் தன்னுடைய உளநிலையைக் காட்டிக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.]

காண்மதி, பாண! இருங்கழிப்
பாய்பரி நெடுந்தேர்க் கொண்கனொடு

தான்வந் தன்றென் மாமைக் கவினே!

தெளிவுரை: பாணனே. காண்பாயாக! பெரிய கழியிடத்தே பாய்ந்து செல்லும் குதிரைகளைக்கொண்ட நெடிய தேருக்குரியவனான தலைவனின் வருகையோடு, என் மாந்தளிர் போலும் மேனிக்கவின், தானும் என்பால் வந்ததே!

கருத்து: 'இனியேனும் அவன் பிரிவுக்குத் துணைசெய்யாதே' என்றதாம்.

சொற்பொருள்: பாய்பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள். நெடுந்தேர் - பெரிய தேர். மாமை - மாந்தளிரின் தன்மை.

விளக்கம்: 'இருங்கழியிலும் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டிய நெடுந்தேர்க் கொண்கன்' எனவே, அவன் வளமலிந்த பெருநிலை பெற்ற தலைமையோன் என்பதும் அறியப்படும். 'அவனொடு கவின் வந்தது' எனவே, அவனொடு கவினும் போயிற்றென்பதும், இனியும் போகும் என்பதும் உணர்த்தினள்.