பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



218

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: தலைவனுக்கு ஆதரவாகத் தலைவியிடம் சென்று வேண்டுவானான பாணன், தலைவனின் உயர்குண நலன்களை எடுத்துக் கூறித், தலைவியிடம் மனமாற்றத்தை உருவாக்க முயல்கின்றான். அவனுக்கு, அவள் கூறும் பதிலுரையாக அமைந்த செய்யுள் இது.]

நாணிலை மன்ற, பாண! - நீயே
கோணேர் இலங்குவளை நெகிழ்த்த

கானலம் துறைவற்குச் சொல்லுகுப் போயே!

தெளிவுரை: பாணன நீயோர் நாணமில்லாத வனாயினையே! கொள்ளுதல் அமைந்த அழகிய வளைகள் நெகிழுமாறு, பிரிவு நோயைச் செய்தவனாகிய கடற்கானற் சோலைத் தலைவனின் பொருட்டாக வந்து, சொற்களை வீணாகவே உதிர்த்தபடி நிற்கின்றனையே!

கருத்து: 'நின் பேச்சுப் பயனற்றது' என்றதாம்.

சொற்பொருள்: கோள் நேர் இலங்கு வளை - கொள்ளுதல் அமைந்த அழகான வளைகள்: 'கொள்ளுதலாவது' செறிவாகப் பொருந்தி அமைதல். சொல் உகுத்தல் - பயனின்றிச் சொற்களைச் சொல்லிப் பொழுதை வீணடித்தல்.

விளக்கம் : 'அவன் பொருந்தாத மனப்போக்கால் வளைநெகிழ வாடியிருக்கும் என்முன்னே நின்று, அவன் குணநலன்களைப் போற்றிப் பலவாறு பேசுதலால், நீயோர் வெட்கங்கெட்டவன்' என்று சொல்லி, அவன் பேச்சை மறுக்கின்றாள் தலைவி. பொய்யெனத் தெளிந்தும் சொல்லலால் 'நாணிழந்தான்' ஆயினன். 'கானற்சோலைத் துறைவன் இவ்வெம்மை விளைத்தல் இயல்பே என்னும் நுட்பமும் காண்க. வளை, கடற்கரைக்குரியதாகலின், அது நெகிழ்த்தல் அவன் தொழில் என்பதுமாயிற்று.

137. தம் நலம் பெறுவரோ?

துறை : தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறு பட்டிருந்தாளாக, இனி 'இந்த வேறுபாடு ஏன்?' என்று வினவிய பாணற்கு, அவள் சொல்லியது.