பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

ஐங்குறுநூறு தெளிவுரை


மூவகை உலகமும் முகிழ்த்தற்கு இடனாகிய தாள்நிழல் சேரின், நமக்கும் நலன் விளைதல் உறுதி என்பதும், இதனால் கற்பாரை உணரவைத்தனர். அத் தாள்நிழல் இந்நூலை என்றும் காப்பதாக என்பதும் கூறினர்.

'அவன் அவள் அது' எனும் மூவகை உலகமாகக் கொள்ளின் 'முறையே முகிழ்த்தன' என்பதற்கும் அதற்கு இயையவே பொருள் விரித்துக் கொள்க. அவனிலே அவள் தோன்றி, அவளிலே அனைத்துப் பிரபஞ்சமும் அடுத்தடுத்துத் தோன்றின என்னும் சிவசக்தித் தத்துவக் கோட்பாட்டினையும், அப்போது உளத்திலே நினைக்க.

வாலிமை - தூய்மை; 'வாலறிவன்' என்னும் குறட்சொல்லுக்குத் 'தூய அறிவினன்' என்றே பொருள் உரைக்கப்படும்.

'இருதாள்' என்று எண்மை சுட்டிக் கூறியது, வலது இறைவன் தாளும், இடது இறைவி தாளும் என விளங்கும் தனிச்சிறப்பு நோக்கியெனவும், அம்மையும் அப்பனுமாகிய இருவரையும் பணிதல் நோக்கி எனவும் கொள்க.

'முறையே முகிழ்த்தன" என்றது, முறையே வாழ்ந்தன. வாழ்கின்றன, வாழ்வன என்னும் நிலையையும் உளங்கொண்டு போற்றியதுமாம்.

இலக்கணம்: ஆசிரியப்பாட்டின் இழிவு மூன்றடி (தொல். செய்.157) என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்த, ஈற்றயல் அடி முச்சீர் பெற்றுவந்த நேரிசை ஆசிரியப்பா இதுவாகும் எனக் காட்டுவர்

பாடபேதம் : 'நீலமேனி' என்பது 'மாஅமேனி' எனவும் மாமலர் மேனி' எனவும் சொல்லப்படும். இவையும் அம்மை மேனிவண்ணத்தை உரைக்கும் சொற்களேயாதல் தெளிக.