பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

219


[து. வி.: பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து தலைவியின் புலவிநீக்கி இன்புற்றவனாகி, அவளைப் பிரிந்தும் எங்கோ போயிருந்தனன். அவன் முன்பு செய்த தீமையையே நினைந்து வாடியிருந்தாளே அல்லாமல், அவன் வந்து செய்த தண்ணளியால் அவள் சிறிதேனும் களிப்படைந்திலள். அதுகுறித்து வினாவிய பாணனுக்கு, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

நின்னொன்று வினவுவல், பாண! - நும்ஊர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்

பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?

தெளிவுரை : பாணனே! நின்னை ஒன்று கேட்பேன். அதற்கு நேரான விடையாகச் சொல்வாயாக. திண்மையான தேரினையுடைய நம் தலைவனை விரும்பியவரான பெண்களுள்ளே, யாரேனும், தம் பழைய அழகினை, நும் ஊரிடத்தே இதுகாறும் அழியாதே பெற்றுள்ளார்களோ?

கருத்து: 'அவனை விரும்பினார் நலன் கெடுதலே இயல்பல்லவோ' என்றதாம்.

விளக்கம் : "திண்தேர்க் கொண்கன்' ஆதலின், அவன் பிறர் தம் வருத்தம் நோக்காது தன் போக்கிலேயே செல்லும் வன்மனமும் உடையன் என்கின்றாள். 'நும் ஊர்' என்றது, தன்னை அவன் ஊரின் உறவினின்றும் பிரித்துக் கூறியது: அவனை மணந்து அவன் மனையாட்டியாகியவள் அவனூரைத் தன்னூர் என்றே கொள்ளல் இயல்பேனும், மனம் நொந்ததால் 'நும் ஊர்' என்றனள். 'பண்டைத் தம் நலம்' என்றது, அவனை நயந்து கூடுதற்கு முன்பு பெற்றிருந்த கன்னிமைப் பெருநலம். 'எவரும் தம் பண்டைநலம் பெறாதபோது, யான்மட்டும் பெறுதல் என்பது கூடுமோ?' என்பாள், அவன் செயலால் தானடைந்திருக்கும் வேதனையை உணர்த்துகின்றாள். "நயந்தோர் பெறுபவோ' என்று, அவன் பெண்டிர் பலரென்பதும் உரைத்தாள்.

138. பண்பிலை பாண!

துறை : தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது.