பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



220

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: தலைமகன், தூது அனுப்பித் தலைவியின் இசைவு பெற்று வந்து, தலைமகளோடேயும் கூடியிருக்கின்றான். அஃதறியாதே வந்து, அவனுக்காகப் பரிந்து தலைவியிடம் வேண்டுகின்றான் பாணன். அவனுக்கு, அவள் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

பண்பிலை மன்ற, பாண!- இவ்வூர்
அன்பில கடிய கழறி,

மென்புலக் கொண்கனைத் தாரா தோயே!

தெளிவுரை : பாணனே! மென்புலத் தலைவனாகிய கொண்கனைக் கண்டு, அன்பில்லாதனவும் கடியத்தக்கனவுமான சொற்களைச் சொல்லியேனும், அவன் பொருந்தாத போக்கை மாற்றி, இவ்வூரிடத்தே எம்மனைக்கண் கொண்டுதராதிருக்கின்றவனாகிய பொறுப்பற்ற நீயும், மக்கட் பண்பான இரக்கம் என்பதே இல்லாதவன் ஆவாய் காண்!

கருத்து: 'அவனைத் திருத்தும் நற்பண்பில்லாதவன் நீ' என்றதாம்.

சொற்பொருள்: பண்பு - பாடறிந்து ஒழுகும் இயல்பு. அன்பில கடிய - அன்பற்றவும் கடியவுமான சொற்கள்.

விளக்கம்: 'தலைவன் தவறான போக்கினனாகும் போதிலே, அவனை இடித்துப் பேசித் திருத்தி நடக்கச் செய்யும் பண்பில்லாதவன் பாணன்' என்று கடிந்து சொல்கின்றாள் தலைவி. அவன் தவற்றொழுக்கினும் அவனையே சார்ந்து நின்று, அவன் பொருட்டு வாயிலாகவும் செயற்படும் பாணனின் போக்கைக் கடிந்து சொன்னது இதுவாகும்.

139. நின்னினும் பாணன் கொடியன்!

துறை: ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது.

[து. வி. தலைவியின் உறவை மறக்கவியலாத ஆற்றாமை நெஞ்சமே வாயிலாகத், தலைவனும் தன் மனைக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனைத் தேடியவனாகப் பாணனும் அங்கே வந்து சேர்கின்றான். அவனுக்குத் தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]