பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

221


அம்ம வாழி, கொண்க! - எம்வயின்
மாணலம் மருட்டும் நின்னினும்

பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே.

தெளிவுரை: கொண்கனே! எம்மிடத்தே பொருந்தியிருந்த சிறந்த நலத்தை எல்லாம் அலைக்கழிக்கும் நின்னைக் காட்டினும், நின் பாணன், தன் பேச்சாற் பிற பெண்டிரை மயக்கி நினக்குக் கூட்டிவைக்கும் அந்தச் செயலினாலே, பல பெண்களின் அழகுநலங்களை மிகவும் சிதைத்து வருகின்றான்! அவன் வாழ்க!

கருத்து: 'அவன் என்று திருந்துவானோ' என்றதாம்.

சொற்பொருள்: மாண்நலம் - மாட்சி பொருந்திய அழகு நலம். மருட்டும் - அலைக்கழிக்கும்; சிதைக்கும். நல்லோர் - பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது; நல்லழகியர் என்பதாம்; இகழ்ச்சிக் குறிப்பு.

விளக்கம்: 'என் நலன் ஒன்றே கெடுக்கும் நின்னினும், நினக்காகப் பல பெண்டிரை மயக்கி இசைவிக்கும் நின் வாயிலான இந்தப் பாணன் மிகவும் கொடியவன்' என்பதாம். 'நல்லவர் நலம் சிதைப்பவன் எவ்வளவு கொடியன்?' என்று உலக வறத்தின்பால் இணைத்துக் கூறியதாகவும் கொள்க.

140. நீ சொல்லுதற்கு உரியை!

துறை : பாணன் தூதகிச் செல்லவேண்டும் குறிப்பினளாகிய தலைமகள், அவற்குத் தன் மெலிவுகாட்டிக் கூறியது.

[து. வி.: தலைமகனை அடையவேண்டும் என்னும் ஆசை வேகம் மிகுதியாகின்றது தலைவிக்கு. தலைவனைத் தேடியவனாக வீட்டின்பால் வந்த பாணனிடம், தன் மெலிவைக் காட்டி. தலைவனைத் தன்பால் வரத் தூண்டித் திருத்துமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

காண்மதி, பாண! - நீ உரைத்தற் குரியை -
துறைகெழு கொண்கன் பிரிந்தென

இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே!