பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. ஞாழற் பத்து

ஞாழல்’ என்பது கொன்றைமர வகையுள் ஒன்று கடற்கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப்பெறுவது. 'புலிநகக் கொன்றை' இதுவென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். இப் பத்துச் செய்யுட்களும் ஞாழல் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன. ஆதலின், இதனை ஞாழற்பத்து என்று தொகுத்து அமைத்துள்ளனர் எனலாம்.

141. பயலை செய்தன துறை!

துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்து போயின காலத்திலே, அந்தப் பிரிவையும் தாங்கமாட்டாது வருந்தி நலிகின்றாள் தலைமகள். அது குறித்து அவளைக் கேட்கும் தோழிக்கு, அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்

பயலை செய்தன பனிபடு துறையே!

தெளிவுரை: நீர் கொண்டுவந்து இட்டதான மணல் மேட்டினிடத்தே, ஞாழலோடு செருந்தியின் பூக்களும் ஒருசேர மணங்கமழ்ந்திருக்க, குளிர்ந்த நீர்த்துறையானது தண்ணிய துவலையான நீர்த்துளிகளை என்மேல் வீசிப், பயலைநோயினையும் செய்தது காண்!

கருத்து : 'இயற்கையும் இன்பவேட்கையை மிகுவித்தலால் ஏக்கமுற்று வாடலானேன்' என்றதாம்.

சொற்பொருள் : எக்கர் - நீர் கொண்டு இட்ட மணல்மேடு. பயலை - பசலை நோய். பனிபடுதுறை - குளிர்ச்சியமைந்த நீர்த் துறை; கடற்கரையிடம்.