பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

225


தெளிவுரை : தோழி! மணல்மேட்டிலுள்ள ஞாழலின் தாழ்வான கிளைகளிலேயுள்ள பூங்கொத்துக்களிடையே, கடற்புட்கள் வந்து தங்கும் துறையினையுடைய நம் தலைவனை, நீ கூறியவாறே இனி நினையேன்! என் கண்களும் இனி உறங்குவளவாகி!

கருத்து: 'மறக்கவும் ஆற்றேன்; உறக்கமும் இழந்தேன்' என்றதாம்.

விளக்கம்: 'உள்ளேன்' எனவும் 'படீஇயர்' எனவும் சொன்ன சொற்கள், தன்னால் அவை இயலாமை குறித்தும், அதனால் கண்படுதல் வாயாமை சுட்டியும் சொன்னவாம். 'புள் இறை கூரல்' தத்தம் இணையுடன் என்றும் கொள்க.

உள்ளுறை: ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வந்தமரத் தாம் கெடுதலுறுமாறுபோல, பிரிவென்னும் துயரம் என்பால் வந்து தங்குதலாலே, யானும் படர்மிகுந்து வருந்தி நலிவேன் என்றதாம்.

புள்ளினமும் உரிய நேரத்தில் வந்து தங்குதலை அறிந்திருக்கத், தலைவன் நம்மை மணந்து நம்மோடு இல்லிருந்து வாழ்தலை அறியாதே போயினனே என்பதுமாம்.

143. இனிய செய்து பின் முனிவு செய்தல்

துறை: புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

[து. வி.: தலைவியைப் பிரிந்து பரத்தையில்லிலே சில நாள் தங்கியிருந்தபின், மீண்டும், தன் மனைக்கு வந்த தலைவனுக்குத், தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்றுறை
இனிய செய்து! நின்று, பின்

முனிவு செய்த - இவள் தடமென் தோளே!

தெளிவுரை : எக்கரின் கண்ணுள்ள ஞாழலிடத்தே. புள்ளினம் ஆரவாரித்தபடி யிருக்கும் அகன்ற துறையிடத்தே, இவளுடைய பெரியவான மென்தோள்கள், முன் களவுக்காலத்தே நினக்கு இனிமையைச் செய்து, பின்னர் இப்போதெல்லாம் நினக்கு வெறுப்பையும் செய்துள்ளனவே!

கருத்து: 'நீதான் இவள்பால் இப்போது அன்பற்ற வனாயினாய்' என்றதாம்.

ஐங். -- 14