பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

231


விடுவாளான தோழி, உவகையோடு, அவளை வாழ்த்திச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழும் துறைவனை

நீ யினிது முயங்குமதி காத லோயே!

தெளிவுரை: அன்புடையாளே! எக்கர் ஞாழனிலிடத்தே, வரம்பு கடந்து ஓங்கும் பெரிய சினையிடத்தே பூத்த பூக்கள், இனிதாக நாற்புறமும் மணம்கமழும் துறைவனை, இனி நீதான் இனிதாகத் தழுவி இன்புறுவாயாக!

கருத்து: 'இனி ஏதும் துனி இடைப்படுதல் இல்லை என்பதால், 'இனிது முயங்குமதி' என்கின்றனள், களிப்பால்.

சொற்பொருள் : வீ - பூ. இகந்து படல் - வரம்புகடந்து உயரமாக விளங்கல், பெருஞ்சினை - பெரிய கிளை. முயங்கல் - தழுவி இன்புறல்.

விளக்கம்: தாழ்ந்துபடு சினைகளின் மலர்களை மகளிர் தம் தழையுடையில் தொடுத்தற்கும், கூந்தலிற் சூடற்கும் கொய்து போயினபோதும், பெருஞ்சினையிலுள்ள பூக்கள் மணம்பரப்பி நிற்கும் துறைக்குரியான் என்கின்றாள். அதன் மணம் இனிது எங்கணும் கமழ்தல்போல, நின் மணவாழ்வும் இனிதாகப் பலரும் வியக்க அமைக என்றதாம். 'காதலோய்' என்றது, தன் அன்புத் தோழியாதலாற் கூறியது; அல்லது, 'தலைவன்மாட்டு ஆராக காதலுடையாளே! நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக!' என்று வாழ்த்தியதுமாம்.

உள்ளுறை: நிலைகடந்த பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவன் என்றது, அவனும் நம் தமர் விரும்பிய வெல்லாம் தந்து களிப்பித்து, நின்னை முறையாக வதுவை செய்து கொண்ட வரம்பிலாப் பெருங்காதலன் என்றதாம். முன் செய்யுளின் 'நல்கினன் நாடே' என்பதனோடு சேர்த்துப் பொருள் நயம் காண்க. பெருஞ்சினை வீ இனிது கமழுதல் போலப் பெருங்குடியினனான அவனும் இனிதே நடந்தனன் என்றதுமாம்.

14. அணங்கு வளர்த்து அகலாதீம்!

துறை : வரைந்து எய்திய தலைமகன், தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது.