பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

ஐங்குறுநூறு தெளிவுரை


நறுமலர்ப் பெருஞ்சினையை அலைகள் வந்து மோதி மோதிச் செல்லுவதுபோல, அவனும் நம்பால் நிலையாகத் தங்கி வாழானாய், வந்துவந்து பிரிந்து போகும் வாழ்க்கையன் என்றும் கொள்ளலாம்.

பிற பாடம்: புணர்வின் அன்னான்.

குறிப்பு : இச் செய்யுட்களுள், 48, 49 ஆம் செய்யுட்கள், தோழியர் திருமண மக்களை உவந்து வாழ்த்தும் சிறந்த வாழ்த்தியல் உரைகளாகவும் விளங்குகின்றன. அவை,

‘நீ இனிது முயங்குமதி காத லோயோ'

எனத் தலைவியை வாழ்த்துவதும்,

‘அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமே

எனத் தலைவனை வாழ்த்துவதும் ஆகும். இவை நல்ல அறவுரை களும் ஆகும்.

'தலைவனோடு இனிதாகக் கலந்திருந்து வாழ்க' என்பதில், அவனை இன்புறுத்தியும் அதிலே நீயும் இன்புற்றும், அவனைப் புறம்போக நினையாவாறு காத்தும் இனிது வாழ்க' என்னும் கருத்துக காணப்படும்.

'பிற ஆடவர்போல நீயும் இவளைப் பிரிவால் நலியச்செய்து வருத்தமுற வாட்டாதே, என்றும் கூடியிருந்து மகிழ்விப்பாயாக' என்னும் கருத்து, தலைவனை வாழ்த்தும், 'அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமே' என்பதால் புலப்படும்.

அன்புத் தோழியரின் இந்த நெருக்கமான அன்புடைமை இல்லாதபோதும், இன்றும் மணமனையில், 'தோழியர்தாம்' மணப்பெண்ணுக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சிகட்கு உதவுகின்றனர். இது இந்தப் பழமையிலேயிருந்து வந்த எச்சமேயெனலாம்.