பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

ஐங்குறுநூறு தெளிவுரை


153. நாடுமோ மற்றே!

துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால், வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது.

[து. வி.: பரத்தையிற் பிரிந்த தலைவனோடு புலவியுற்று வாடி இருக்கின்றாள் தலைவி. அவன் அவளைச் சினந்தணிவித்துத் தன்னை ஏற்குமாறு விட்ட வாயில்களையும் மறுத்துப் போக்கினாள். தன் குறையுணர்ந்த தலைவன், அவள் விருப்பம் மேலெழ, தன் வாயிலோரை முன்போக இல்லத்துள் போக்கித், தான் அங்கு நிகழ்வதை அறியும் விருப்போடு புறத்தே ஒதுங்கி நிற்கின்றான். வாயிலோரை எதிர்வந்து தடுத்த தோழி, அத்தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர வொழிந்த தூவி குவவுமணற்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை

நன்னெடுங் கூந்தல் நாடுமோ மன்றே!

தெளிவுரை : வெள்ளாங் குருகின் பிள்ளையோ எனக் காணச்சென்ற மடநடை நாரையானது, அங்கே அதனைக் காணாத துயரத்தாலே கோதிக் கழித்த தூவிகள், உயர்ந்த மணல் மேட்டிடத்தே நெற்போர்போலக் குவிந்திருக்கும் கடற்றுறைக்கு உரியவனான தலைவனின் கேண்மையினை, நல்ல நெடிய கூந்தலை உடையவளான தலைவிதான், இனியும் நாடுவாளோ?

கருத்து: 'அவள் நாடாள் ஆதலின்; நாடுவார்பாலே செல்லச் சொல்லுக' என்பதாம்.

சொற்பொருள்: உளர - கோத; ஒழிந்த - கழித்து வீழ்ந்த. குவவு மணல் - காற்றால் குவிக்கப்பெற்று உயர்ந்த மணல்மேடு. போர்வில் பெறூஉம் - நெற்போர்போலக் குவிந்து கிடக்கும். நன்னெடுங் கூந்தல்; தலைவியைச் சுட்டியது. நாடுமோ - விரும்புமோ?

விளக்கம்: வெள்ளாங் குருகின் குஞ்சோவெனக் காணச் சென்ற நாரை தன் இறகைக் கோதிக் கழிக்க, அதுதான் போர்