பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

243


'தலைவனை ஏற்றுக் கொள்வது பற்றியே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றாயே; அவன் நம்மேல் சற்றும் அருள் அற்றவன்; பரத்தையர்பால் அன்புகாட்டுபவன்; பழிக்கஞ்சி இங்கு வரும்போதும், வாயில்கள் வந்து பரத்தை வாடி நலிவதாகக் கூறவும், அப்படியே அவர் பின்னாற் போய்விட்டவன்" என்று கூறித் தலைவி மறுத்து உரைக்கின்றாள் என்று கொள்க. மகப்பேற்றுக்கு உரிய காலமாயினும், உரிமையுடையவளும் யானே என்பது அறிந்தானாயினும், அவன் என்னை அறவே மறந்து பரத்தையர் சேரியிடத்தேயே வாழ்பவனாயினானே! இனி, நாம் முன் சிறுபோதிலே வைத்தாடிய பஞ்சாய்ப் பாவையினைப் பிள்ளையாகக் கொள்ளவேண்டியதுதான்போலும் என்று வாழ்வே கசந்தவளாகத் தலைவி கூறுகின்றாள்.

உள்ளுறை: 'நாரை பதைப்பத் ததைந்த நெய்தல், கழிய ஓதமொடும் பெயரும் துறைவன்' என்றது, பெரியோர் இடித்துக் கூறுதலாலே எம்மை நோக்கி வருகின்றானான தலைவன், வாயில்கள் வந்து பரத்தையின் வருத்தம்பற்றிக் கூறவும், அவள்மேற் கொண்ட மருளால், அவர் பின்னேயே போவானாயினான் என்பதாம்.

156. எனக்கோ காதலன்!

துறை : பரத்தையிடத்து வாயில்விட்டு ஒழுகுகின்ற தலைமகனது, வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது.

[து. வி.: ஊடியிருந்தாளான பரத்தையிடம் தூதுவிட்டு, போயினவர் சாதகமான பதிலோடு வராமையாலே வருந்தி, தன் மனைவியிடமாவது செல்லலாம் என்று வீட்டிற்குத் தன் வாயில்களைத் தூதனுப்புகின்றான். அவர்களுக்குத் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருவின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்

எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!

தெளிவுரை : வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரை, தன் இறகுகளைக் கோதுதலாலே கழித்த செவ்விய புள்ளிகளையுடைய தூவிகள்