பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

ஐங்குறுநூறு தெளிவுரை


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப!
நின்னொன்று இரக்குவென் அல்லேன்;

தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே!

தெளிவுரை : வெள்ளாங்குருகின் பிள்ளைபோலுமெனக் கருதிக் காணச்சென்ற மடநடை நாரையானது, பசியானது வருத்த வருந்தியபடி இருக்கும் குளிர்ந்த நீர்வளமுடைய சேர்ப்பனே! நின்னிடத்தே யான் யாதொன்றும் தருகவென இரக்கின்றேன் அல்வேன். நீதான் கவர்ந்துபோயினையே இவளுடைய அழகு, அதனை மட்டுமேனும் மீண்டும் இவளுக்குத் தந்துவிட்டுச் செல்வாயாக!

கருத்து: "நின் கொடுமையால் இவள் நலனிழந்தாள்" என்றதாம்.

சொற்பொருள்: பசிதின - பசி பெரிதும் வருத்த. பனிநீர் - குளிர்ச்சியான நீர். அல்கும் - தங்கியிருக்கும்.

விளக்கம் : 'உன்னிடம் யாதும் இரக்கவில்லை அன்பனே! இவளிடமிருந்து பறித்துப் போயின நலத்தைமட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போவாய்' என்கிறாள் தோழி. 'வஞ்சியன்ன நலம் தந்து சென்மே' என அகநானூற்றும் இப்படிக் கூறுவதாக வரும் - (அகம். 376). கலி 128-இலும் இவ்வாறு சொல்வதாக வரும். நின்பால் நினக்குரியதான் ஒன்றை இரப்பின் நீ தரலாம், தராதும் மறுக்கலாம்; ஆயின், எம்மிடமிருந்து கவர்ந்து போயினதைத் தந்துவிட்டுப் போவதுதான் நின் ஆண்மைக்கு அழகு என்பதும் புலப்பட வைக்கின்றனள்.

உண்டிக் காலத்துத் தலைவி மறாமைப் பொருட்டு விருந்தோடு கூடியவனாகத் தலைவன் தன் வீட்டிற்கு வந்தான் என்று கொள்ளலும் பொருந்தும். விருந்தாற்றற் கடமையும், அவர்முன் தலைவனிடம் சினந்து கொள்ளாத அடக்கமும் தலைவியின் பண்பாதலை அறிந்தவன், அவள் சினத்தைத் தணிவிக்க இவ்வாறு வந்தனன் என்க.

உள்ளுறை: 'நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப' என்றது, பரத்தை நாட்டமேயுடைய நீயும், மிக்க பசி எழுந்தமையாலே வீட்டுப்பக்கம் உணவுக்காக வந்தனைபோலும் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். நின் வயிற்றுப்பசிக்கு உணவு