பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

ஐங்குறுநூறு தெளிவுரை


தன் பசிக்கு உணவாகக் கருதுதலல்லது. மீனின் அழிவைப் பற்றி ஏதும் கருதாத காக்கைபோலத்,தலைவனும், நம்மைத் தன் காமப் பசிக்கு உணவாகக் கருது தலல்லது, நம்பால் ஏதும் அருளற்றவன் என்றதுமாம்.

163. கை நீங்கிய வளை!

துறை: மேற் செய்யுளின் துறையே.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்தென்

இறையேர் முன்கை நீங்கிய வளையே!

தெளிவுரை : பெரிய கடற்கரைக்கண் உளதான சிறுவெண் காக்கையானது. கரிய கழியிட்டதே எழும் அலைகள், கரையிலே மோதிச் சிறுதுளிப்படும் ஒலியினைக் கேட்டவாறே. உறக்கம் கொள்ளும் துறையினையுடையவன் தலைவன். அவன். என்னைப் பிரிந்தானாதலினாலே, சந்து பொருந்திய என் முன்கைளிலே விளங்கிய வளைகளும் என்னைக் கைவிட்டவாய்த் தாமும் நீங்கிப் போயினவே!

கருத்து: 'வளை கழன்று வீழும்படிக்கு வருந்தி மெலிவுற்றேன்' என்றதாம்.

சொற்பொருள்: துவலை - சிறு துளிகள். துவலை ஒலி - அலைமோதித் துவலைப்படும்போதிலே எழுகின்ற ஒலி. இறை - சந்து.

விளக்கம் : அவன் துறந்தான் என்பதனாலே, என்னிலும் தாமே நெருக்கமானவை போலக் கைவளைகள் தாமும் கைவிட்டு நீங்கிப் போயினவே என்று புலம்புகின்றனள். இதனால் உடம்பு நனி சுருங்கலைக் கூறினாளாம்.

உள்ளுறை: சிறு வெண் காக்கையானது. இருங்கழித் துவலையின் ஒலியிலே இனிதாகத் தூங்குவதுபற்றி கூறினாள். அவ்வாறே தலைவனும், தன்னை நினையாதே, ஊரிடத்தே எழும் அலருரைகளைக் கேட்டும் நமக்கு உதவும் அறிவுவரலின்றி, அதிலேயே மயங்கி உறங்குவானாயினான் என்றதாம்.