பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

255


164. அலர் பயந்தன்றே!

துறை : தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைமகன் சேரிப்புறத்தேயும் பரத்தையுறவிலே விருப்பமுற்றுச் செல்லுகின்றனன். அதனாலே வாடி நலன் அழிந்த தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை யாரும்
தண்ணந் துறைவன் தகுதி

நம்மோ டமையா தலர்பயந் தன்றே!

தெளிவுரை: பெருங் கடற்கரைக்கண்ணதான சிறுவெண்காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள அயிரை மீன்களைப் பற்றி உண்ணுகின்ற, குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவன் தலைவன். அவன் தகுதியானது, நம்மை நலிந்து வாடி நலனழியச் செய்தலோடும் நில்லாதே, ஊரிடத்தும் அலர் பயப்பதாக ஆயிற்றே!

கருத்து: 'அவன் செயலால் ஊர்ப் பழியும் வந்ததே' என்றதாம்.

சொற்பொருள் : அயிரை - 'அயிரை' எனப்படும் மிகச் சிறு மீன் வகை. ஆரும் - மிகுதியாகப் பற்றி உண்ணும். தகுதி - தகுதிப்பாடு; அவன் குடிஉயர்வும் அறிவுச்சால்பும் பிறவும்.

விளக்கம் : நம்மை வாடிவருந்தி நலனழியச் செய்ததோடும் நில்லாது, அவன் ஒழுக்கம் ஊரும் அறிந்ததாய், பழித்துப் பேசும் பேச்சினையும் தந்துவிட்டதே என்பதாம். தன் துயரைத் தாங்கியே போதும், பிறர் பழிப்பேச்சை நினைந்து வருந்தும் தலைவியின் மனவேதனை இதனாற் காணப்படும்.

உள்ளுறை : சிறுவெண் காக்கை பெரிய கடற்கரையது என்றபோதும், கடலிடத்துப் பெருமீன்களைப் பற்றியுண்டு வாழாது, கருங்கழிப் பாங்கிலேயுள்ள சிறுமீன்களாகிய அயிரைகளைப் பற்றித் தின்னும் என்றது, அவ்வாறே தலைவனும் தகைமிகு தலைவியோடு முறையாகக் கூடி மகிழாது, புல்லிய பரத்தையரையே விரும்பித் திரிவானாயினான் என்றதாம்.