பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

ஐங்குறுநூறு தெளிவுரை


'துறைவன் தகுதி' என்றது, அவன் பரத்தையர் மாட்டும் அன்புற்று, அவர்க்கு நல்லன செய்தலும், அவரை இன்புறுத்தலும் செய்யும் அருளுடையான் ஆயினான் என்று, அவன் அருள் மிகுதி போற்றுவதுபோல, அதனை இழித்துக் கூறியதாம்.

165. வளை கொண்டு நின்ற சொல்!

துறை : இதுவும் மேற்செய்யுளின் துறையே.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்லென்

இறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே!

தெளிவுரை : பெரிய கடற்கரைக் கண்ணதாகிய சிறிய வெண் காக்கையானது. நீரற்று வரும் கழியிடத்தேயுள்ள சிறு மீன்களை நிரம்ப உண்ணும் துறைவன் தலைவன். அவன் முன்பு சொல்லிய 'நின்னைப் பிரியேன்' என்னும் உறுதிச்சொல், சந்து பொருந்திய அழகு விளங்கும் என் வளையைக் கவர்ந்து கொண்டு நிற்பதாயிற்றே!

கருத்து: 'அவன் சொல்லை நம்பிய மடமையேன்' என்றதாம்.

சொற்பொருள்: அறுகழி - நீரற்றுப் போய்க்கொண்டு வரும் கழி. ஆர - நிரம்ப. மாந்தும் - உண்ணும். இறை - சந்து.

விளக்கம் : 'அவன் கூறிய உறுதிச்சொல் என்னை நலிவித்து என் கைவளைகளைக் கவர்ந்துகொண்டுதான் நின்றது' என்று. அவளது சொல்லைப் பேணாத கொடுமையை எண்ணிக் கூறுகின்றாள். இது பழைய இன்ப நினைவாலே பிறந்த ஏக்க மிகுதியாகும்.

உள்ளுறை : நீர் அறாத பெருங் கடற் சிறு வெண் காக்கை, அக் கடலிடத்து மீனையுண்டு வாழாது, நீர் அறுகழிக் சிறு மீன் ஆர மாந்தும் புன்மைபோலத், தலைவனும் பெருமனையாளனாக இருந்தும் நீர்மைமிக்க மனைவியை மணந்து வாழாது. அன்புச்செறிவற்ற புல்லிய பரத்தையரிடம் மயங்கிக் கிடப்பானாயினான் என்றனளாம்.