பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

ஐங்குறுநூறு தெளிவுரை


167. தொல் கேள் அன்னே!

துறை: பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வரயிலாய் வந்தார்க்கு, அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்த வழித், தலைமகள் சொல்லியது.

[து. வி.: பரத்தையை நாடிப் பிரிந்துபோன தலைவன்' அங்கும் மனம் பற்றாதவனாக மனைவிபால் வர விரும்புகின்றான். தன் வரவுரைத்துத் தலைவியின் இசைவறிந்துவரச் சில, ஏவல்களை விடுக்கிறான். அவர்களிடம் தோழி, அவனைப் பழித்துக்கூறி வாயில் மறுத்தபோது, தலைவி, தன் பெருமிதம் தோன்றக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.]

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி

நல்கான் ஆயினும் தொல்கேள் அன்னே!

தெளிவுரை : பெரிய கடற்கரைக்கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள இனமாகிய கெடிற்று மீனை உண்ணும் துறைக்குரியவனாகியவன் தலைவன். அவன் நமக்குத் தலையளி செய்வான்போலக் கூறிப் பின்னர் செய்யாதே ஒழிந்தானாயினும், அவன் நமக்குப் பண்டே உறவாகிய அத் தன்மையனும் ஆவானே!

கருத்து 'ஆகவே, அவனை வெறுத்தல் நமக்கு இயலாது' என்றதாம்.

விளக்கம் : பெருங்கடற்கரைக் காக்கையாயினும், இருங்கழியின் இனக்கெடிறு ஆரும் என்றது, அதன் இயல்பு அவ்வாறு சிறுமீன் நாடிப்போதலே என்பது உணர்த்தியதாம். 'நல்குவன் போலக் கூறி* என்றது, வரைந்து கொண்ட ஞான்று கூறியது; அது பொய்த்து, நல்கான் ஆயினான் என்பதாம். 'தொல் கேள்' என்றது, பிறவிதோறும் தொடரும் கேண்மை சுட்டியது; ஆகவே, அவனை வெறுத்தல் இயலாமையும் கூறினாள்.

உள்ளுறை : பெருங்கடற் காக்கையாயினும், இருங்கழிக்கண கெளிற்றினை நாடியே செல்லுமாறு போலத் தலைவனும் தன் தலைமைக்கேற்பத் தலைவியை மணந்துகூடி வாழாதவனாகிப் பரத்தையர்பால் நாடிச்செல்லும் இழதகைமையே கொளவான் ஆயினான் என்கின்றனள்.