பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

25



ஆசிரியர் ஓரம்போகியார்

ஐங்குறுநூறான இத்தொகையின் மருதச் செய்யுள்கள் நூறையும் பாடியவர் 'ஓரம்போகியார்' ஆவர். குறுந்தொகையுள் 10, 70, 122, 127, 384-ஆம் செய்யுட்களையும்: அகநூனூற்றுள் 286, 316- ஆம் செய்யுட்களையும்; நற்றிணையுள் 20, 306ஆம் செய்யுட்களையும்; புறத்துள் 284 ஆம் செய்யுளையும் இவர் செய்தவராகவும் காணப்படுகின்றனர்.

'ஓரம்போகி' என்பது இவரின் ஊர்ப்பெயர் எனவும், இவரது இயற்பெயரே எனவும் சான்றோர் கருத்து வேறுபடுவர். 'ஓர் அம்பு போக்கி' என்னும் விவ்லாண்மை குறித்த புகழ்ச்சொல்லே 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும், 'ஓர் அம்பு ஏவி’ என்பது 'ஓரம்பேவி' யாகி 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும். ஓரம் என்பது உண்மைக்கு மாறாக நீதியை வளைத்துக்கூறல்; அங்ஙனம் கூறாத மனத்திண்மையாளர் இவராதலால் ஓரம்போகிலார்' எனப்பெற்றனர்; அஃதே திரிந்து 'ஓரம் போகியார் என்றாயிற்று எனவும்; ‘ஓர் அம் போகியார்' என்னும் 'ஒப்பற்ற அழகிய போகத்தே திளைப்பவர்' என்பதே ஓரம்போகியார் என்று அமைந்தது எனவும், ஆய்வாளர்கள் பலபடக் கூறுவர். 'தனக்கு இழிந்தாளைப் பெயர்புற நகுமே' (புறம் 248) எனத் தமிழ்மறவனின் சால்பை ஓவியப்படுத்தும் இவரைத் தமிழ் மறமாண்பிலேயும் சிறந்தார் எனவும், 'ஓர் அம்பு போக்கி' வெல்லும் திறல் பெற்றார் எனவும் கருதுதலே மிகமிகப் பொருந்துவதாகும்.

இவர் செய்யுட்களிலே, மாந்தர்தம் மனவுணர்வுகளின் ஆழ்ந்தகன்ற நினைவுக்கூறுகளை அறிந்தறிந்து வியக்கலாம்; 'பொன்மொழிகளே' எனப் போற்றிப் பேணத்தகுந்த பல சொற்றொடர்களையும் காணலாம். குருகாற் பற்றப்பட்டு மீண்ட கெண்டையானது, அயலே தோன்றிய தாமரையின் முகையினைக் கண்டதும், குருகெனவே கருத்திற் கொண்டதாகி அஞ்சி நடுங்கும் என்று காட்சிப்படுத்தி, அச்சமுறும் மனவியல்புகளைத் தமிழோவியப்படுத்தும் தனித்திறலார் இவர் ஆவர்