பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

261


அறிந்துவைத்தும், தோழி, என் கண்கள்தாம் யாது செயலைக் கருதி இவ்வாறு பசலை கொள்வனவோ?

கருத்து: 'அவனை என்றும் மறந்திலேன்; எனினும் கண்கள் அவனைக் காணாமையாற் கலங்கும்' என்றதாம்.

சொற்பொருள்: ஞாழல் - கொன்றை. முனையின் - வெறுப்பின். பூஞ்சினை - பூக்களையுடைய கிளை. உண்மை - உளனாகும் வாய்மை. பசக்கும் - பசலை கொள்ளும்.

விளக்கம் : கடற்கரைக்குரிய காக்கை கானற்சோலைப் புறம்போய்க் கொன்றை மரத்திலே தங்கும்; சிறிது போதிலே அதுவும் வெறுக்க, அங்கிருந்து அகன்று, புன்னைப் பூஞ்சினையில் சென்று தங்கும் என்று, ஓரிடம் பற்றியிருந்து மனநிறைவு கொள்ளாத அதன் சபலத்தன்மை கூறினாள். அத் துறைவனான தலைவனும் அத்தகைய மனப்போக்கினனே என்பதற்கு. 'கண் பசத்தல்' காணக்காட்டிக் காதற்கு வித்திட்ட கண், இப்போது நேரிற் காணாமையாற் பசந்தது எனத் தன் துயரம் கண் மேலிட்டுச் சொல்லுகின்றாள்.

உள்ளுறை: 'கொன்றைக்கிளை வெறுப்பின் புன்னைக் கிளைக்குப் போய்த் தங்கும் சிறுவெண் காக்கைபோல, நம் மீதிலே வெறுப்புற்றவன், மற்றோருத்தியை நாடிப் போய்த் தங்குவானாயினான். ’அவன் இயல்பு அஃதே என்பதறிந்தும், நம்மை மறந்தானை நம்மால் மறக்க வியலவில்லையே’ என்பதாம்.

170. நல்லன் என்பாயோ!

துறை : தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சியில்லை; நம்மேல் அன்புடையன்' என்ற தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைமகன் பரத்தையுறவு நாடினான் என்பதறிந்து வேறுபட்டாள் தலைமகள். அதனால், அவன் வீட்டிற்கு வரும்போதும், அவனை உவந்து ஏற்காமல் வெறுத்து ஒதுங்கிப் போகலானாள். இதனைத் தவிர்க்க நினைத்த தோழி, 'நீ நினைப்பதுபோல அவன் பரத்தையொழுக்கத்தான் அல்லன்; ஏன் அவனைவிட்டு ஒதுங்குகின்றாய்?' என்று கூறித் தெளிவுபடுத்த முயல்கின்றாள். அவட்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]